அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு.. வாதங்களை அடுக்கிய அமலாக்கத்துறை.. தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் மனு தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், "அமலாக்கத் துறையின் புகாரை மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிந்து, வழக்கறிஞர்களின் இறுதி வாதம் தொடங்கவுள்ளது. இந்த சமயத்தில் வழக்கை மதுரைக்கு மாற்றுவது தவறான அணுகுமுறை" என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த், "மதுரை நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது. ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தாமதம் ஏற்படுத்தப்படுகிறது" என்று வாதம் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
