டாஸ்மாக் முறைகேடு! முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், விசாரணையை துவங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர்.
சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை எனவும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்றனர்.
எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை எனவும் இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம் எனவும் குறிப்பிட்டனர்.
நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த துவங்கினால் அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும் என கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications