தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதித்த தடை நீக்கம்! ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 27ஆம் தேதி விதிக்கப்பட்ட இந்த தற்காலிக தடை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்கள் எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்க செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், அவற்றை தமிழ்நாடு சட்டவிரோத கனிமச்சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை மாதம் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்க ஜூன் 27ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த தடையை ரத்து செய்யக் கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்த விதிகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்கு சொந்தமானது, அவற்றை எங்கு விற்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே 3 மாத தடையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி தீர்ப்பளித்தனர். மேலும் தமிழக அரசு விதித்த தடையை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.



Click it and Unblock the Notifications
