”கார், பைக் - தங்கம், வெள்ளி பரிசு” ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐடி நிறுவனம்!
சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் (Xenovex Technologies) சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், கார், பைக், தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக போனஸ், சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை பொதுவாக நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், சமீப காலமாக ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கார், பைக், தங்க காசு உள்ளிட்டவற்றையும் அளித்து மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றன.

கார், பைக் பரிசு
பம்பர் பரிசு போல இத்தகைய பரிசுகளை சில நிறுவனங்கள் அளிப்பது ஊழியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. தற்போது புதிய நிதி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றன. அதுபோல சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக பரிசுப்பொருட்களையும் அளிப்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில்தான், சென்னையை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக், தங்கம் உள்ளிட்டவற்றை பரிசாக அளித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள்
சென்னை ஈக்காட்டுதாங்கலில் 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது Xenovex Technologies நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 250 பேர் பணியாற்றி வருகிறார்கள். பல ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவப்படுத்தும் விதமாக சென்னை மதுரவாயலில் பாராட்டு விழாவை இந்த நிறுவனம் நடத்தியது. இந்த பாராட்டு விழா நிகழ்வில், 250 க்கும் அதிகமான கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆனந்தன் சண்முகம், பிரபாகர் மற்றும் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினர். பிரபல தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றி வரும் சிறந்த ஊழியர்கள் 6 பேருக்கு, ஒரு கார் மற்றும் 5 பைக்குகளை பரிசாக வழங்கி பாராட்டினார். அதேபோல, மேலும் 20 ஊழியர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சமூகத்திற்கு கைமாறு செய்ய வேண்டும்
பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய KISS FLOW நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், "நமக்கு அனைத்தையும் கொடுத்த சமூகத்திற்கு கைமாறு செய்ய வேண்டும்" என்றார். கடினமாக உழைத்தால் நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் உயர முடியும் என்று Xenovex இயக்குனர் ஆனந்தன் சண்முகம் கூறினார்.
முன்னதாக, ரெட்ரோ தீமில் நடைபெற்ற 80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ் தலைமுறையினருக்கு பிடித்தமான விளையாட்டுகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக், தங்கம் என பரிசுப்பொருட்களை அள்ளிக் கொடுத்தது நிறுவனத்தின் ஊழியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.












Click it and Unblock the Notifications