விஜய் சோதனை செய்த கத்திப்பாரா தூணின் சிறப்பம்சம் என்ன? தராசு போல காற்றில் கட்டப்பட்ட அதிசயம்!
சென்னை: சென்னை நகரின் மிக முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்று கத்திப்பாரா. ஏற்கனவே மேம்பாலம், சாலைகள், மெட்ரோ ரயில்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த இடத்தில், தற்போது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக 101 அடி (உயரத்தில் பிரம்மாண்ட மெட்ரோ பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதைத்தான் முதல்வர் விஜய் சமீபத்தில் பார்வையிட்டார்..
ஆசியாவிலேயே மிகப்பெரிய சுழல் வடிவ மேம்பாலத்திற்கு மேலே, காற்றில் கட்டப்பட்டு வரும் இந்த இமாலய மெட்ரோ தூண் மற்றும் பாலத்தின் சிறப்பு என்ன? எந்த தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்படுகிறது என்பதைப் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கீழே காண்போம்.
ஏன் 101 அடி உயரம்?
கத்திப்பாரா சந்திப்பில் ஏற்கனவே 3 அடுக்குகள் உள்ளன:
1. தரைவழிச் சாலைகள்
2. கத்திப்பாரா சாலை மேம்பாலம்
3. முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதை
தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பாதை இவை அனைத்திற்கும் மேலே செல்ல வேண்டும். இதனால், நிலமட்டத்திலிருந்து சுமார் 101 அடி உயரத்தில், 4வது அடுக்காக இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. அதாவது, ஒரு 10 அடுக்குக் கட்டிடத்தின் உயரத்திற்குச் சமமான உயரத்தில் மெட்ரோ ரயில் பறக்கப்போகிறது!
தரைக்குத் தூண் போடாமல் காற்றில் பாலம் கட்டுவது எப்படி?
கத்திப்பாரா சந்திப்பில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கீழே தூண்கள் நட்டு, பெரிய சாரங்கள்அமைத்து பாலம் கட்டினால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துவிடும்.
இதைச் சமாளிக்க பொறியாளர்கள் (Balanced Cantilever Method என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
எளிய உதாரணம்
ஒரு நபர் தன் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் நீட்டி, இரண்டு கைகளிலும் சமமான எடையுள்ள பொருட்களைப் பிடித்துத் தாங்குவது போலத்தான் இது!
முதலில் மையத்தில் ஒரே ஒரு வலுவான பிரம்மாண்ட தூண் மட்டும் எழுப்பப்படும். அதன்பின், பாலத்தின் தனித்தனிப் பகுதிகள் Precast தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும். அந்தப் பகுதிகளைத் தூணின் இருபுறமும் ஒரே நேரத்தில், தராசுத் தட்டு போல சமமாக இணைத்துக் கொண்டே செல்வார்கள்.
இதனால் தரைப்பகுதியில் எவ்வித முட்டுகளோ அல்லது சாரங்களோ தேவையில்லை. கீழே வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருக்கும்.. மேலே பாலம் இருபுறமும் வளர்ந்து கொண்டே போய் அடுத்த தூணோடு இணையும்.
பாலத்தின் துண்டுகளை வெறும் சிமெண்ட் பூச்சி மூலம் மட்டும் ஒட்ட வைக்க முடியாது. அதற்குப் பயன்படுவதுதான் போஸ்ட்-டென்ஷனிங் தொழில்நுட்பம்.
பாலத்தின் கான்கிரீட் துண்டுகளுக்குள் வலுவான ஸ்டீல் கம்பிகள்/கேபிள்கள் செலுத்தப்படும். கான்கிரீட் செட் ஆன பிறகு, அதிநவீன எந்திரங்கள் மூலம் அந்த இரும்பு கேபிள்கள் மிகக் கடுமையாக இழுக்கப்பட்டுப் பூட்டப்படும். இது கான்கிரீட்டை அமுக்கி, பாலம் வளைந்து கொடுக்காமல் பாறை போல மிக உறுதியாக இருக்கச் செய்கிறது.
125 மீட்டர் வளைவு
பொதுவாக பாலங்கள் நேராகக் கட்டப்படும். ஆனால் கத்திப்பாராவில் 125 மீட்டர் ஆரத்தில் ஒரு பெரிய வளைவை இந்த 101 அடி உயரத்தில் அமைக்கிறார்கள். எந்தவிதக் சப்போர்ட்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய வளைவில் பாலத்தைக் கட்டுவது இந்திய மெட்ரோ வரலாற்றுக்கே மிகப்பெரிய சவாலான பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
கீழே இயங்கும் முதல் கட்ட மெட்ரோ ரயில்களுக்கும், மேலே உருவாகும் இரண்டாம் கட்ட மெட்ரோ பாலத்திற்கும் இடையே வெறும் 2.3 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது. இவ்வளவு துல்லியமாக உருவாக்கப்படும் இந்த கத்திப்பாரா மெட்ரோ பாலம், சென்னை உள்கட்டமைப்பின் புதிய அடையாளமாக மாறப் போகிறது!


Click it and Unblock the Notifications
