நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் , தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தின் மேல் பவானி மற்றும் அவலாஞ்சியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. நடுவட்டத்தில் 6 செமீ மழையும், திருப்பத்தூர், பெரம்பலூர் அகரம் சீகூர், கடலூர் மாவட்டம் கீழச்சேர்வையில் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 6 செமீ மழையும், நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருப்பத்தூர் மாவட்டம் நட்ராம்பள்ளி, கோவை மாவட்டம் சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, திருவள்ளூர், கோவை சின்கோனா, வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் தலா தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா, தொழுதூர், லப்பைக்குடிகாடு, சிதம்பரம் AWS, தாமரைப்பாக்கம், திருவாலங்காடு, எறையூர், சென்னை அயனாவரம் தாலுகா அலுவலகம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
சிதம்பரம், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை நுங்கம்பாக்கம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, ஸ்ரீபெரும்புதூர், ஜெயம்கொண்டம், சூளகிரி அம்பத்தூர், ஆற்காடு, தாம்பரம், அரக்கோணம் , வாணியம்பாடி செங்கம், ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூரின் மலைப்பாங்கான பகுதிகள், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மிதமான மழை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
கர்நாடக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications