சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத மழை.. இது மேகவெடிப்பு அல்ல.. வானிலை மையம் திட்டவட்டம்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது கடந்த 10 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது. ஆனால் இது மேற்கொண்டு வலுபெறவில்லை.
புயலாகவும் மாறவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் காற்றழுத்தத்தின் மைய பகுதி நீண்ட நேரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்ததால் அந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்தது.

44 செ.மீ.
இதனால் நீர்நிலைகள் நிரம்பி விட்டன. சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 161 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் எங்கு திரும்பினாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. சீர்காழியில் ஒரு கிராமமே மழை நீரில் அடித்து செல்லப்பட்டது.

தரங்கம்பாடி
தரங்கம்பாடியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. சீர்காழியில் இதுவரை இது போன்ற அடைமழையை பார்த்ததில்லை என மக்கள் கூறுகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் இடுப்பளவு மழை நீர் சூழ்ந்துள்ளது.

122 ஆண்டுகளில் இல்லாத மழை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை சீர்காழியில் பெய்துள்ளது. இத்தனை அதிக அளவு மழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை.

மேகவெடிப்பு மழை
இது முழுக்க முழுக்க காற்றழுத்தத்தினால் பெய்துள்ளது. மேக வெடிப்பு மழை என்றால் ஒரு மணி நேரத்தில் அதிக மழை பெய்வது. ஆனால் அந்த மழைக்கு முன்பும் பின்பும் மழையில்லாமல் இருக்கும். இதுதான் மேகவெடிப்பு. ஆனால் சீர்காழியில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது. எனவே இதை மேக வெடிப்பு என சொல்லக் கூடாது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதீத மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்காதது ஏன் என செய்தியாளர்கள், பாலகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தோமே என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications