வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ .. அக்.11ல் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை: சென்னையில் பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ ரயில் சேவையை, வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாகச் சேவை தொடங்குவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல்கட்டமாகச் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது. பயணிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. சுமார் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில், 118.9 கி.மீ. தொலைவிற்கு இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில்:
மாதவரம் முதல் சிப்காட் வரை (3-வது வழித்தடம்)
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (4-வது வழித்தடம்)
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்)
எனப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மூன்று வழித்தடங்களிலும் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4-ஆவது வழித்தடத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையே பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் நிபந்தனையுடனான ஒப்புதலைப் பெற்றிருந்த மெட்ரோ நிர்வாகம், மே மாதத்தில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தது. இதையடுத்து, ரயில்களை இயக்குவதற்கான இறுதி அனுமதியும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்கத் தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் புதிய அரசு பதவியேற்பு போன்ற காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது ரயில்களை இயக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், தொடக்கத் தேதிக்காகக் காத்திருப்பதாகவும் மெட்ரோ அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளாராம்.
தொடக்கத்தில் பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே 11 ரயில் நிலையங்களுடன் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அதன் பின்னர் கூடுதலாக 6 ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
