இன்னும் சில மாசம் தான்.. நகரின் முக்கிய பகுதியில் புது ரூட்டில் ஓட தொடங்கும் மெட்ரோ ரயில்கள்.. செம
சென்னை: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்தின் கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் இதில் மெட்ரோ ரயில்கள் ஓட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஏற்கனவே இப்போது இரண்டு ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்தகட்டமாக மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- லைட் ஹவுஸ், மாதவரம்- சோழிங்கநல்லூர் என மூன்று ரூட்களில் மெட்ரோ கட்டுமானம் படுவேகமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை மெட்ரோ கட்டுமானம் தொடர்பாக முக்கியமான அப்டேட் ஒன்று வந்துள்ளது. மிக விரைவில் சில மாதங்களிலேயே பூந்தமல்லியில் இருந்து மெட்ரோ ரயில்கள் ஓட இருக்கிறது.
மெட்ரோ: அதாவது கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 16 கி.மீ தூரத்தைக் கடப்பதே பெரும் போராட்டம் தான். இந்த சாலையைக் கடக்கவே சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால், அந்த நிலை விரைவில் மாறப் போகிறது.
இந்த பகுதியில் நடந்து வரும் மெட்ரோ கட்டுமானம் முழுமையாக நிறைவடையும்போது சில நிமிடங்களில் இந்த 16 கிமீ தூரத்தைத் தாண்டலாம். இந்த ரூட்டில் கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த ரூட்டில் மெட்ரோ ரயில்கள் ஓட தொடங்கப் போகிறது. இதற்கிடையே இந்த ரூட்டில் போரூர் பைபாஸ் மற்றும் ஐயப்பன்தாங்கல் இடையே மெட்ரோ தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கட்டுமானம்: போரூர் புறவழிச்சாலை நிலையம், தெள்ளியராகரம், ஐயப்பன்தாங்கல் மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் மெட்ரோ ஸ்டேஷன் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தண்டவாளம் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது. இந்த பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான பகுதி என்பது கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ரூட்டில் ஒரு பகுதியாகும், இந்த ரூட்டில் 19 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "போரூர் முதல் பூந்தமல்லி இடையே 66 சதவீத பணிகளும், பவர்ஹவுஸ் முதல் போரூர் வரையிலான ரூட்டில் 46 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான பாதை 2025 நவம்பரில் தொடங்கப்படும். இப்போது ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சில மாதங்களில் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதேபோல மெட்ரோ ஸ்டேஷன்களை கட்டும் பணிகளும் தொடங்கப்படும்" என்றார்.
படிப்படியாக: சென்னை மெட்ரோவின் இரண்டாவது கட்டத்தில் 116 கிமீ தூரத்திற்குக் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மெட்ரோ முதற்கட்டத்தைப் போலவே இதையும் படிப்படியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி பவர்ஹவுஸ் - பூந்தமல்லி ரூட் முதலில் அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு வரும். அதேநேரம் காரிடார் 3 மற்றும் 4இல் திருமயிலை மற்றும் அதன் அருகே உள்ள நிலையங்கள் கடைசியாக 2028இல் பயன்பாட்டிற்கு வரும்.
மற்ற ரூட்களை காட்டிலும் இந்த பூந்தமல்லி- லைட்ஹவுஸ் ரூட்டில் தான் கட்டுமானம் படுவேகமாக நடந்து வருகிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் இருந்தே வந்துள்ளது. குறிப்பாக ஆழ்வார்திருநகரில் இருந்து ஆலப்பாக்கம் வரையிலான 4 கிமீ தூரத்திற்கு இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட பாதை கட்டுமானம் சவாலானதாக இருந்தது. ஆனால், அதுவும் கூட விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications