கோவிலை இடிக்கத் துடிக்கும் சித்திக்? பரபரப்பை பற்ற வைத்த பாஜக எச்.ராஜா! மெட்ரோ கொடுத்த விளக்கம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக இரு கோயில்களை இடிப்பதாகவும் உயர் அதிகாரிகளாக இருக்கும் சிலர் இதற்காக திட்டமிட்டு செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உரிய மதிப்பளித்து செயல்படுகிறது என சென்னை மெட்ரோ விளக்கமளித்துள்ளது.

சென்னையில் தற்போது ஆயிரம் விளக்கு முதல் நுங்கம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோடு பகுதியில் துர்க்கை அம்மன் கோவில் மற்றும் ரத்னா விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.

H Raja BJP Metro


இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்காக அந்த கோபுரத்தை இடிப்பதாகவும் பணிகளுக்குப் பிறகு துர்க்கை அம்மன் கோயில் கோபுரத்தை கட்டித் தருவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. இதனை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா,”ஏன் இந்து கோயில்களை மட்டும் டார்கெட் செய்து இருக்கிறீர்கள் என நீதிபதியே கேட்டிருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகளான சித்திக் மற்றும் லிவிங்ஸ்டன் கோயிலை இடிக்க வேண்டும் என துடிக்கின்றனர். கோயில் அருகில் இருக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் எச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுகிறது என கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,”சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மூத்த அலுவலர்களுக்கு எதிராக திரு.H.ராஜா அவர்கள் சில தவறான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தவறான தகவல் பல்வேறு ஊடகங்கள் மற்றும் Youtube சேனல்களில் வெளியிடப்பட்டு இன்று பரப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தவறான தகவல், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியில் 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையம் அமையவுள்ள இடத்தில் துர்கை அம்மன் கோயில் மற்றும் ரத்ன விநாயகர் கோயிலை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேவையில்லாமல் இடித்து வருவதாகவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சில உயர்அலுவலர்களை குற்றம் சாட்டுவதாகவும் கூறுகிறது. அத்தகைய தகவல்கள் தவறானவை மற்றும் முழுமையான விவரங்களை அறியாமலேயே கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்தை தாமதமின்றி மற்றும் திறம்பட நிறைவு செய்வதற்கான நோக்கத்துடன் மட்டுமே சட்டபூர்வமாகவும் கடமையுடன் தங்கள் பொதுப் பணிகளைச் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பெருமளவில் பயன்பெரும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும் போது, கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை மாற்றுவது / சில இடங்களில் இடமாற்றம் செய்வது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாதவை. இதில் மத நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களும் அடங்கும். இது சட்டத்தின் முறையான செயல் முறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. ​​இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் எந்த மத சார்பும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன.

சமீபத்தில், சாத்தியமான இடங்களில், 2018ல் அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி இடித்தல், மாற்றம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய சில கோயில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சில பணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மாற்றி செயல்படுத்தியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் நிலையத்தின் வடிவமைப்பு, ஒயிட்ஸ் சாலையில்அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயிலின் சுமார் 15 ஆண்டுகள் பழமையான நுழைவு கோபுரம் மற்றும் ஸ்ரீரத்ன விநாயகர் கோயிலை இடமாற்றம் செய்வது என்பது 2018 ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

துரதிஷ்டவசமாக, சுரங்கப்பாதை கட்டுமான வடிவமைப்பின் கட்டுப்பாடுகள் காரணத்தினால் மேற்கூறிய கட்டமைப்புகளின் மாற்றம்/இடமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தற்போது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பெருமளவில் பயன்பெரும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும் போது, அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உரிய மதிப்பளித்து செயல்படுகிறது என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+