சென்னையின் புது ராட்சசன்! கத்திப்பாரா மேலே 108 அடி உயரத்தில்.. தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!
சென்னை: கத்திப்பாரா மெட்ரோ சந்திப்பிற்கு மேலே, மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களாக கத்திப்பாராவில் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில்.. தற்போது தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் 5-வது வழித்தடத்தில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக தற்போது, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான வளைவுப் பாலத்தின் வழியாக ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை நோக்கி தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

108 அடி உயரத்தில் பிரம்மாண்ட ராட்சசன்
கத்திப்பாரா சந்திப்பு என்பது சென்னையின் மிக நெரிசலான சாலை சந்திப்புகளில் ஒன்றாகும். ஏற்கெனவே இந்த இடத்தில் தரைவழி சாலைகள், அதற்கு மேலே கத்திப்பாரா சாலை மேம்பாலம், அதற்கு மேலே முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதைகள் என மூன்று அடுக்குகளில் போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்த மூன்று அடுக்குகளுக்கும் மேலே, நான்காவது அடுக்காக புதிய மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கத்திப்பாரா சந்திப்பில் சுமார் 108 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட தூண் எழுப்பப்பட்டுள்ளது. இதுவே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்தியாவிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான தூண் ஆகும்.
சுமார் 10 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமான இந்தத் தூணின் மீது, கீழே செல்லும் வாகனங்களுக்கும், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் 413 மீட்டர் நீளத்திற்குப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது.
வளைவான பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் சவால்
கத்திப்பாரா பகுதியில் இடநெருக்கடி அதிகம் என்பதால், இந்தப் பாலம் நேராக இல்லாமல் 125 மீட்டர் ஆரம் கொண்ட வளைவுடன் கட்டப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பாதைகளிலேயே இதுதான் மிகவும் கூர்மையான வளைவுப் பகுதியாகும்.
கத்திப்பாராவின் 108 அடி உயரத்திலிருந்து தொடங்கும் இந்தப் பாலம், ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை நோக்கிச் செல்லும்போது படிப்படியாக இறங்கி சுமார் 27 மீட்டர் உயரத்தில் நிலையத்துடன் இணைகிறது.
இத்தகைய உயரமான மற்றும் வளைவான பாலத்தில் ரயில்கள் பாதுகாப்பாகவும், சத்தமில்லாமலும் செல்வதற்காகச் சிறப்புத் தொழில்நுட்பம் கொண்ட பேலஸ்ட்லெஸ் எனப்படும் ஜல்லிக்கற்கள் இல்லாத கான்கிரீட் தண்டவாளம் அமைக்கப்படுகின்றன.
வளைவுகளில் ரயில் திரும்பும்போது பயணிகளுக்கு எந்த அதிர்வும் ஏற்படாத வகையில் தண்டவாளங்களின் சாய்வு துல்லியமாகக் கணக்கிடப்பட்டுப் பொருத்தப்பட்டு வருகிறது.
45 நாட்களில் பணிகளை முடிக்க இலக்கு
மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (47 கி.மீ.), கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. அதனைத் தொடர்ந்து, சென்னை வர்த்தக மையம் முதல் பட் ரோடு வழியாக ஆலந்தூர் வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் அமைக்கும் பணியை 45 நாட்களுக்குள் முழுமையாக முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தப் பணிகளின் ஒரு பகுதியாகவே தற்போது கத்திப்பாரா வளைவுப் பாலத்தின் மீது தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தண்டவாளப் பணிகள் முடிந்தவுடன், ரயில்களை இயக்குவதற்கான உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் பொருத்தும் பணிகள் நடக்கும்.
அதன்பின் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கான சிக்னல் கருவிகளைப் பொருத்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.
இந்தப் பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை தொடங்கப்படும்போது, ஆலந்தூர் மெட்ரோ நிலையம் சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து மையமாக மாறும். ஏற்கெனவே ஆலந்தூரில் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மற்றும் பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்கள் இணைகின்றன. இப்போது 5-வது வழித்தடமும் இங்கு இணைவதால், மூன்று மெட்ரோ வழித்தடங்கள் சந்திக்கும் பிரம்மாண்ட மையமாக ஆலந்தூர் உருவெடுக்கும்.




Click it and Unblock the Notifications
