ஆயுத பூஜை லீவுக்கு இன்று ஊருக்கு போறீங்களா? கவனிங்க.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்!
சென்னை: ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக பேருந்து ஏறவும், ரயில்களை பிடிக்கவும் செல்ல வேண்டி இருக்கும் என்பதால், சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அதிக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினம் தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பண்டிகை காலங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களில், சென்னை மெட்ரோ ரயில்கள் பொதுமக்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வுக்குச் சென்ற லட்சக்கணக்கான மக்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட நிலையில், 3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களை இயக்கி, அதுவும் கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் டிக்கெட் கட்டணம் இன்றி இலவசமாகவே இயக்கியது மெட்ரோ நிர்வாகம்.
இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் இன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று இரவு 10 மணிக்கு மேல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளிக்குப் பதிலாக ஒவ்வொரு 7 நிமிட இடைவெளிகளிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளியூர் செல்லும் பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி நேரத்துக்கு செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications