தக்காளி வெற்றிக் கழகம்.. சென்னை மாநகர பஸ்சில் ஓடிய வாசகத்தால் பயணிகள் ஷாக்! எம்டிசி சொல்வது என்ன?
சென்னை: சென்னை மாநகர பேருந்தில் ரூட் விவரங்கள் ஓடும் டிஜிட்டல் போர்டில் 'தக்காளி வெற்றிக் கழகம்' என்ற வாசகம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விடியல் பயண திட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்து என்றால் அதுபற்றிய வாசகங்களும், வண்டி செல்லும் இடங்களும் ஓடக்கூடிய போர்டில் ஆளும் தவெக அரசை கிண்டல் செய்யும் வகையில் தக்காளி வெற்றிக் கழகம் என வாசகம் ஓடியது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழகமும் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் நகர பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னை நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளின் ரூட் நம்பர் மற்றும் பேருந்து எங்கு செல்கிறது என்ற விவரங்கள் டிஜிட்டல் போர்டுகளில் ஓடுவதை பார்க்க முடியும். பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய பேருந்தை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த டிஜிட்டல் போர்டுகளில் வழித்தட விவரங்கள் ஓடுகின்றன.

தக்காளி வெற்றிக் கழகம்
இந்நிலையில், தமிழக அரசு பேருந்து வழித்தடங்களுக்கான டிஜிட்டல் போர்டில், தக்காளி வெற்றிக் கழகம் என்ற வாசகம் ஓடியதால் பயணிகள் இடையே பரபரப்பு எற்பட்டது. தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை கிண்டல் செய்யும் விதமாக தக்காளி வெற்றிக் கழகம் என்று ஓடியது.
பேருந்துகளில் நடத்துநர்கள் மட்டுமே கையாளக்கூடிய இந்த டிஜிட்டல் போர்டில், தக்காளி வெற்றிக் கழகம் என்ற வாசகத்தை ஓட விட்டது யார்? என்ற கேள்வி எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்து கழகம் விளக்கம்
சென்னை மாநகர போகுவரத்து கழகம் இது குறித்து கூறுகையில், "குறிப்பிட்டுள்ள பேருந்தின் வழித்தட விவர பலகை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இவ்வாற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது. மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
உரிய தீர்வு காண வேண்டும்
தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் இதே போல பேருந்துகளின் டிஜிட்டல் போர்டுகளில் சில மர்ம நபர்கள் மாற்றம் செய்து கட்சியின் பெயரை ஓட விட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. அவ்வப்போது பேருந்துகளின் டிஜிட்டல் போர்டுகளில் மாற்றம் செய்து இதுபோன்ற வாசகங்களை ஓட விடுவதால் இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கருத்து
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறுகையில், "அரசு பேருந்து டிஜிட்டல் போர்டுகளில் இதுபோன்ற கட்சியின் பெயரை கிண்டல் செய்வது, கட்சியின் பெயரை ஓட விடுவது போன்ற செயல்களால் பயணிகள்தான் ரூட் போர்டு தெரியாமல் சிரமப்படுகிறார்கள். தொடர்ச்சியாக இத்தகைய செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பணிமனையில், வைத்து மர்ம நபர்கள் இதனை மாற்றுகிறார்களா.. இல்லை பேருந்துகள் ஹால்ட் செய்யப்படும் இடங்களில் மாற்றுகிறார்களா என்பதை கண்டறிந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
