'நீ இறங்கி ஆடு கபிலா, இது நம்ம காலம்'.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் பதிவு
சென்னை: இன்று இரவு முதல் செவ்வாய்கிழமை வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதனை சுட்டிக்காட்டும் வகையில் நீ இறங்கி ஆடு கபிலா.. இது நம்ம காலம்.. என்று உற்சாகம் தரும் வகையில் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "கேடிசி ( சென்னை) - நீ இறங்கி ஆடு கபிலா, இது நம்ம காலம் ( இன்று இரவு முதல் செவ்வாய் வரை)..

இன்று உட்பட அடுத்த 4-5 நாட்களுக்கு கேடிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) மண்டலத்திற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மிக நல்ல மழை பெய்யக்கூடும்.
வெள்ள அபாயம் போன்ற சூழல் எதுவும் இல்லை. ஒருசில இடங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும், ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது சென்னைக்குத் தேவையான மிதமான மழை தான். காலையில் வெப்பமும் வெயிலும் நிறைந்து காணப்படும், அதனைத் தொடர்ந்து மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதுவே இதர பொதுவான வானிலை அமைப்பாக இருக்கும்.
காலை நேரம் பிரகாசமான வெயிலுடன் தொடங்கினால், மாலையில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் மேகமூட்டமாகக் காணப்பட்டால், முதன்மையான மழைப் பொழிவு இரவு நேரத்திற்கு நகரக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கு நாம் கவனிக்க வேண்டிய வானிலை அமைப்பு இதுதான். கடந்த ஒரு வாரமாகச் சென்னை முழுவதும் முற்றிலும் வறண்ட வானிலை நிலவிய நிலையில், இந்த மழையை மகிழ்வோடு அனுபவிப்போம்" இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறிய இதே விஷயத்தை சென்னை வானிலை மையமும் உறுதி செய்துள்ளது. சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை மோசமாக ஏமாற்றிவிட்டது. சரியான மழை பெய்யவில்லை.. பொதுவாக தென்மேற்கு பருவ மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கை கொடுக்காது என்றாலும், ஓரளவு மழை பெய்து கிளைமேட்டை மாற்றும்.. நீர் நிலைகளில் ஒரளவு தண்ணீர் சேரும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னை நகரம் ஓரளவு வறட்சியில் இருந்து தப்பிக்கும். ஆனால் இந்த முறை நிலைமை மோசமாகி உள்ளது.
மழை எப்போது பெய்யும் என்று ஏங்க வைக்கும் வகையில் வெயில் கொளுத்துகிறது. மழை பெய்தாலும் பெரிய அளவில் இருப்பது இல்லை.. நல்ல மழை பெய்து பல நாட்கள் ஆகிவிட்டது. குளங்கள், ஆறுகளில் தண்ணீர் நன்றாக ஓடி வருடங்கள் ஆகிவிட்டது. சென்னைக்கு வெளியே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குளங்கள் எல்லாம் வற்றிப்போய் கிடக்கிறது. தண்ணீரே இல்லாமால் கட்டாந்தரையாக பல குளங்கள் மாறிவிட்டன. மக்கள் எல் லினோ தாக்கத்தால் பரிதவித்துக்கிடக்கிறார்கள். இரவில் கடுமையான புழுக்கம், பகலில் வெப்பம் என்று தவிக்கிறார்கள். இப்போது மழை பெய்ய போகிறது என்ற அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
