சென்னை பெருங்குடியில் உள்வாங்கிய சாலை.. திடீர் பள்ளத்தில் பீய்ச்சியடித்த தண்ணீர்.. போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை பெருங்குடியில் திடீரென்று சாலை உள்வாங்கி தண்ணீர் பீய்ச்சியடித்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் எம்ஜிஆர் சாலை அமைந்துள்ளது. பெருங்குடியில் உள்ள முக்கியமான சாலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று பெருங்குடி எம்ஜிஆர் சாலை உள்வாங்கியது.
திடீரென்று அந்த சாலையில் பள்ளம் விழுந்தது. அதுமட்டுமின்றி அடுத்த சில நிமிடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்க தொடங்கியது. பள்ளத்தில் இருந்து நீருற்று போல் தண்ணீர் பீய்ச்சியடித்ததால் அந்த சாலையில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது.
முதலில் லேசாக உருவான பள்ளம் அடுத்தடுத்து அதிகரித்தது. அதுமட்டுமின்றி சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் விழுந்ததால் எங்கே வாகனம் ஓட்டி சென்றால் உள்ளே விழுந்து விடுவோமோ என்று அஞ்சி வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை சாலைகளில் நிறுத்தினர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சென்னை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது சாலையின் கீழ்பகுதியில் கழிவுநீர் குழாய் செல்கிறது. அதில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சியடித்து இருக்கலாம் என அவர்கள் கூறினர்.
அதுமட்டுமின்றி சாலையில் விழுந்த பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவம் பெருங்குடி எம்ஜிஆர் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
