“ஆபரேஷன் டிரைவ்”.. சென்னையில் ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது.. விடிய விடிய போலீசார் அதிரடி!
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், நேற்று இரவு மட்டும் 'ஆபரேஷன் டிரைவ்'வில் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் திருவொற்றியூர், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பான கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த மோதலில், சினிமா துணை நடிகர் பிரதீப் ராஜ் என்பவர் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக கொல்லப்பட்டார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்த மறுநாளே, அவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஞாயிறன்று, பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்றது தவெக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தற்போது போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு, ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் 'ஆபரேஷன் டிரைவ்' என்ற அதிரடி நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர். நேற்று ஒரே இரவில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் சுமார் 70 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிறப்பு கண்காணிப்பு மூலம் நேற்று இரவு முதல் ரவுடிகளை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
