சென்னை தாசில்தார் சரோஜா உடன் லஞ்சம்.. கணவர் உள்பட 2 காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
சென்னை: சென்னை தாசில்தார் சரோஜா உடன் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை மொத்தம் 40 அடி அகலம் இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக 20 அடியாக குறுகி உள்ளது. இந்த சாலையில் ஒருவர் பகிரங்கமாக ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டதால் ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடி அளவிற்கு குறைந்தது. இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுபற்றி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த மனு மீது மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ராஜன்நகர், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு சென்னை தெற்கு மண்டல துணை கமிஷனர் அமித்தை சந்தித்து சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் முறையிட்டார். அவர் 3 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதியளித்ததுடன், அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இப்பணியை கண்காணிக்க அடையாறு மண்டல அலுவலகத்தில் சிறப்பு தாசில்தாராக பணிபுரியும் தாசில்தார் சரோஜாவை நியமித்தார்.
இதனிடையே 20க்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால் இந்த சாலை 40 அடி சாலையாக மாறி இப்பகுதி மக்களுக்கு பெரிய சாலை வசதி கிடைக்கும். இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே தனக்கு ஒருகோடி ரூபாய் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக கூறி லஞ்சம் கேட்டாராம் தாசில்தார் சரோஜா.
பின்னர் ஒரு வழியாக லஞ்சமாக கேட்ட ரூ.1 கோடி பணம் ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3 லட்சத்தை முன்பணமாக தாசில்தார் சரோஜா கேட்டாராம். ஆனால் அந்த பணத்தை கொடுக்க விரும்பாத தங்கவேலு அவரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க முடிவு செய்தார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.3 லட்சம் பணத்தை வாங்கும்போது தாசில்தார் சரோஜாவை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த மே 14ம் தேதி மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சரோஜாவின் அலுவலகத்தை கண்காணித்தனர். அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜாவின் அலுவலகத்துக்கு ரசாயணம் தடவிய ரூ.3 லட்சம் லஞ்ச பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் அந்த பணத்தை சரோஜா நேரடியாக வாங்க மறுத்துவிட்டாராம்.
தனது கணவரான சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றும் தனது கணவர் பிரவீனின் நண்பரும், பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ்காரருமான அருண்குமார் மூலம் லஞ்ச பணத்தை வாங்கினாராம்.. அப்போது போலீஸ்காரர் அருண்குமார் கைது செய்யப்பட்டார். லஞ்சம் கேட்ட தாசில்தார் சரோஜாவும் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் லஞ்ச விவகாரத்தில் சிக்கிய போலீஸ்காரர்கள் அருண்குமார், பிரவீன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications