பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை: பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று நேற்று ட்விட்டரில் அதிக அளவில் வைரலானது.
அந்த வீடியோவில்,பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள் அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என்று மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ளதாக திருமாவளன் சர்சசைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இப்படியாக தொடர்ந்து சில நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை காட்டி சமூக வலைதளங்களில் பலரும் சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கைது செய்ய வலியுறுத்தல்
திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நடிகை குஷ்பு கூறியிருந்தார். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் திருமாவளவனை கைது செய்ய கோரினார்.

திருமாவளவன் மீது கடும் தாக்கு
ஹெச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், தனது சரக்கு மிடுக்கு பேச்சால் அனைத்து சமுதாய பெண்களை காமத்திற்கு அலைபவர்கள் என்றும் ஆண்கள் ஆண்மை அற்றவர்கள் என்று பேசிய தீயசக்தி திருமாவளவன் இன்று இந்து தர்மத்தில் பெண்களை விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ளார்.இந்த சமூக விரோதியை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மனுதர்மத்தை எரிப்போம்
இதற்கிடைய இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், பெண்கள் காலம்காலமாக வன்கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிற மனுதர்மம் எனும் கருத்தியல்தான் காரணம் என்பதை நமது முன்னோர்கள் பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக அம்பேத்கர், பெண்களை இழிவு செய்யும் மனுதர்மத்தை கொளுத்துவோம் என்றார். தந்தை பெரியாரும் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிப்போம் என்றார்.

நாளை போராட்டம்
இந்த அடிப்படையில்தான் 1 மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் மனுதர்மம் என்பது பெண்களை கொச்சைப்படுத்துகிறது என குறிப்பிட்டேன். ஆனால் அரசியல் ஆதாயம் கருதுகிற ஜாதிவெறி பிடித்த கூட்டம், மதவெறி பிடித்த கூட்டம் திட்டமிட்டு எனக்கு எதிரான பொய் பரப்புரையை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிராக நான் பேசியதைப் போன்று தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதுமுற்றிலும் பொய். பெண்களுக்காக நாங்கள் வாதாடுகிறோம். பெண்கள் மீட்சி பெற குரல் கொடுக்கிறோம்" என்றார். அத்துடன் மனு ஸ்மிருதி நூலை தடை செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை போலீஸ் வழக்கு
இந்நிலையில் : பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications