எனக்கும் பசிக்கும்ல.. டெல்லி தடியடியின்போது கூலாக ‘பர்கர்' சாப்பிட்ட கரப்பான்பூச்சி கட்சி லீடர்! பதவி பறிப்பு
டெல்லி: டெல்லியில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்று போலீசாரிடம் தடியடி வாங்கினர். பலரும் படுகாயமடைந்தனர். இந்த வேளயைில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் விஜேதா தாஹியா கூலாக 'பர்கர்' சாப்பிட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதற்கு விளக்கம் அளித்தபோதும் வயிறு பசித்ததால் பர்கர் சாப்பிட்டேன் என்று அவர் கூறிய நிலையில் அவரிடம் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சோனம் வாங்சுக் உள்பட மாணவர் அமைப்பினர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட நிலையில் போலீசார், அதிரடி போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உண்ணாவிரதமும் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினிாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தான் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தற்போதுஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி போராட்டம் நடத்துவோருக்கு உணவுகள் வழங்கி வருகின்றனர். இதனால் மத்திய அரசு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்க தயாராகி வருகிறது.
இப்படியான சூழலில் தான் தற்போது உண்ணாவிரத போராட்டத்துக்கு நடுவே 'எனக்கும் பசிக்கும்ல' என்பது போல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக விஜிதா தாஹியா பர்ஹர் சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேற்றைய தினம் ஜந்தர் மந்தரில் இருந்து அனைவரும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்று தடியடி நடந்த சம்பவத்தை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேதா தாஹியா டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான துரித உணவகத்தில் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி அவர் பர்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வீடியோக்கள் வெளியாகியன. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுபற்றி விஜேதா தாஹியாவிடம் கேட்டபோது, ''நான் பேரணியில் பங்கேற்றேன். ஆனால் பேரணி முடிவடைந்த பிறகு அங்கிருந்து சென்றேன். நான் ஏன் பர்கர் சாப்பிட்டேன்? என்பது இன்று பெரிய விஷயமாக பேசப்படுகிறது. பொதுவாக ஒருவர் ஏன் பர்கர் சாப்பிடுகிறார்? அவருக்கு பசியாக இருக்கிறது. இதனால் அவர் பர்கர் சாப்பிட விரும்புகிறார். அவ்வளவு தான். எனக்கும் அப்போது மிகவும் பசியாக இருந்தது. நல்ல உணவை சாப்பிடும்போது மனதிற்கு இதமாக இருக்கும்'' என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தான் விஜேதா தாஹியா மீது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிரடியாக நீக்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''அமைதியான முறையில் போராடுபவர்களும், எங்கள் குழுவினரும் காவல்துறையின் கொடூரமான வன்முறையை எதிர்கொண்டிருந்த வேளையில் எங்கள் செய்தி தொடர்பாளர் விஜேதா தஹியா தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. அவரது இந்த உணர்வற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இத்தகைய செயல்பாடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுவதுடன், எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விஜேதா தஹியா நீக்கப்படுவதோடு, அவர் அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
