Cauvery: கபினி, கேஆஎஸ் அணைகளில் 80% நீர் இருந்தும்! காவிரியை திறக்காமல் பஞ்சபாட்டு பாடும் கர்நாடகா!
சென்னை: கர்நாடகா அணைகளில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும் நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இன்றைய நிலவரப்படி (ஜூலை 21) எந்தெந்த அணைகளில் நீரின் அளவு என்ன என்பதை பார்க்கலாம்.
கர்நாடகாவுக்கும் தமிழகத்திற்கும் காவிரி நீர் பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கேரளாவுடன் முல்லை பெரியாறு, ஆந்திராவுடன் பாலாறு என அண்டை மாநிலங்களுடன் நீருக்கான போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கர்நாடகாவுடனான பிரச்சனையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சிக்கிறது. இந்த அணையை கட்டினால் தங்கள் மாநில குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என சப்பை கட்டு கட்டுகிறது. ஆனால் தமிழகமோ அந்த இடத்தில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்கிறது.
எனினும் விடாபிடியாக கர்நாடகாவில் எந்த அரசு வந்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பதும் அதற்கு தமிழகம் எதிர்ப்பதுமாக உள்ளது. இதையடுத்து இந்த பிரச்சனை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுவதே இல்லை. கடந்த ஜூன் மாதத்திலும் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டிய கர்நாடகா வெறும் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துள்ளது. அது போல் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி நீரை திறந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 21 நாட்களாகியும் இன்னும் காவிரி நீரை திறக்காமல் பஞ்சபாட்டு பாடுகிறது.
காவிரி நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு அழுத்தம் தருமாறு தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது. நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்து விட்டது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அது தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும் 0.8 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதையும் தில்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது கர்நாடகாவில் இன்றைய நிலவரப்படி ஹரங்கியில் 129 அடிக்கு 121.65 அடி நீர் இருப்பு உள்ளது, ஹேமாவதியில் 117 அடி கொள்ளளவில் 99 அடி நீர் உள்ளது. கபினியில் 65 அடி கொள்ளளவில் 52.77 அடி நீர் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 124.8 அடியில் 92.61 அடி நீர் இருப்பு உள்ளது.
என்னதான் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. மழை வந்தால் திறந்துவிடுவதாக கூறி வருகிறது. காவிரி நீர் இல்லாமல் தமிழக டெல்டா விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
