முக்கிய கட்டத்தை அடைந்த சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலம்! 20 வருட கனவு!
சென்னை: சென்னையின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான மேம்பால திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் இரண்டாம், முதலாம் அடுக்குகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய இலக்கின்படி, வரும் 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து, பாலத்தை பொதுமக்கள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்குத் திறக்க அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்படும் இந்த 21 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட உயர்மட்டச் சாலை, சுமார் ₹3,570 கோடி முதல் ₹5,770 கோடி வரையிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பெருநகரச் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், சென்னை துறைமுகத்திற்கான சரக்கு வாகனப் போக்குவரத்தை தடையின்றி இயக்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2 அடுக்கு கட்டமைப்பு வசதி
இந்த மேம்பாலத் திட்டத்தின் சிறப்பம்சமே இதன் இரட்டை அடுக்கு வடிவமைப்புதான். சென்னை துறைமுகத்தின் 10-வது கேட் (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி கூவம் நதிக்கரையோரமாக கோயம்பேடு வரை சுமார் 15 கி.மீ தூரத்திற்கு பாலம் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்படுகிறது.
மேல் அடுக்கு ஏன்?
துறைமுகத்திற்கு வந்து செல்லும் கன்டெய்னர் லாரிகள் மற்றும் கனரகச் சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 6 வழிச்சாலையாக இது இயங்கும். இதன் மூலம் நகருக்குள் லாரிகள் நுழைவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
கீழ் அடுக்கு ஏன்?
பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களின் பயன்பாட்டிற்காக 4 வழிச்சாலையாகச் செயல்படும். கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வரை ஒற்றை அடுக்கு பாலமாக இருக்கும். அதாவது பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ஒற்றை அடுக்கு மேம்பாலமாக இந்த பாதை தொடரும்.
நகர்ப்புற மக்களுக்கு 13 பிரத்யேக பாதைகள் (Ramps)
நகரப் போக்குவரத்து தடையின்றி இறங்கி ஏற ஏதுவாக, பாலத்தின் கீழ் அடுக்கில் மொத்தம் 13 பாதைகள் (7 நுழைவுப் பாதைகள், 6 வெளியேறும் பாதைகள்) அமைக்கப்பட்டு வருகின்றன.
சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர் டேங்க் சாலை மற்றும் கோயம்பேடு ஆகிய முக்கிய இடங்களில் வாகனங்கள் பாலத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காமராஜர் சாலை மற்றும் ஸ்பர் டேங்க் சாலையில் பிரத்யேக வெளியேறும் பாதைகள் அமைக்கப்படுவதால், உள்ளூர் வாகனங்கள் சிக்னல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள முடியும்.
மழை தாமதத்தை ஈடுகட்ட 16 மணி நேர வேலை!
செம்பாக்கம் அருகில் உள்ள மையத்தில் பாலத்திற்கான கான்கிரீட் தூண்கள் மற்றும் பெரிய பாக்ஸ் கர்டர்கள் இரவு பகலாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை மற்றும் காலநிலை காரணமாக மே மாதத்திற்குள் முடிய வேண்டிய முதற்கட்ட கர்டர் பொருத்தும் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதத்தைச் சரிசெய்ய, இதுவரை தினமும் 11 மணி நேரம் (பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம்) நடந்து வந்த கட்டுமானப் பணிகளை, இனி நாளொன்றுக்கு 16 மணி நேரமாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது கூவம் நதிக்கரையை ஒட்டி முதல் அடுக்கிற்கான கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு
இந்த மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது, தினமும் சுமார் 20,000 உள்ளூர் சிறிய வாகனங்களும், 5,500 கனரகச் சரக்கு வாகனங்களும் இதன் வழியே பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டில் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை 52,000-ஐத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் எதிர்காலத் தேவையை ஈடுசெய்யும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
