Chennai Rain: கோயம்பேடு டூ கொளத்தூர் வரை.. சென்னையில் திடீரென கொட்டிய கனமழை!
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதே நேரம் நேற்றும் மாலை நேரத்தில் லேசான மழை பெய்திருந்தது. இதனையடுத்து இன்றும் மழை பெய்திருக்கிறது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக விடுத்திருந்த அறிவிப்பில், "வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 13 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.13ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.14 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (11-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (12-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications