"இரவு முழுக்க ஸ்பெஷல் டீம்.." காலையில் மழைநீர் பெரியளவில் தேங்கவில்லையே எப்படி? ஆணையர் சொன்ன தகவல்
சென்னை: விடிய விடிய சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், மழை நிலவரம் மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரவு முழுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே பருவமழை நிலவரம் மற்றும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மாநகராட்சி ஆணையர்
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன், "தொடர் மழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக நீரை வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், மழையின் வேகம் குறையவில்லை. இந்த மழைப்பொழிவு வரும் 22ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு எங்களது வேண்டுகோள் ஒன்றுதான். நீர்நிலைகள், ஆற்று படுகைகள் மற்றும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளுக்கு செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சென்று வீடியோ எடுப்பது, வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களை தவிர்க்கவும். டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது. வீடுகளில் உள்ள மின்சாதனங்களையும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கையாள வேண்டும்.
கொட்டிய கனமழை
சென்னையில் சராசரியாக 73 மிமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ஐந்து முதல் ஆறு இடங்களில் 100 மிமீ-க்கு அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது. இருப்பினும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இரவு மழை பெய்தாலும் காலையில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லன. பொது போக்குவரத்தும் தடையின்றி இயங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் உத்தரவின்படி கூடுதல் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டு இரவு முழுவதும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
எந்தவொரு பாதிப்பும் இல்லை
அமைச்சர்கள் நள்ளிரவிலும் அதிகாலையிலும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர். விடிய விடிய களத்தில் நின்று பணிகளை ஒருங்கிணைத்தனர். பல பகுதிகளில் அதிக திறன்கொண்ட ராட்சத பம்புகள் மூலம் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சுரங்கப் பாதைகள் அனைத்தும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டதால், இன்று காலை எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி வாகனங்கள் சீராக இயங்கி வருகின்றன.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மழை தொடரும் என கூறியுள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
புகார்கள்
இன்று காலை 5 மணி வரை மழைநீர்த் தேக்கம், மரங்கள் முறிந்து விழுந்தது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 1,200-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது போர்க்கால அடிப்படையில் உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது. மழை நீர் தேக்கம், மரங்கள் விழுவது, தெருவிளக்குகள் முறையாக எரியவில்லை ஆகிய புகார்கள் தான் அதிகம் வந்தது. 1913 மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இது மட்டுமின்றி செயலி மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவாகும் புகார்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம், போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஒருங்கிணைந்து களத்தில் நிற்கிறோம்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.




Click it and Unblock the Notifications
