"நீ என்ன போலீசா?" நடுரோட்டில் டிராபிக் போலீசை ஒருமையில் திட்டி 2 பெண்கள் போட்ட ருத்ர தாண்டவம்!
சென்னை: சென்னை அம்பத்தூர் - புழல் பிரதான சாலையில், விபத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரண்டு இளம் பெண்கள் நடுரோட்டில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும், பணியில் இருந்த போக்குவரத்துக் காவலரையும் தகாத வார்த்தைகளால் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தால் வெடித்த சர்ச்சை
அம்பத்தூர் பகுதியில் வழக்கம்போல் கடுமையான வாகனப் போக்குவரத்து நிலவி வந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள் சிறிய அளவிலான விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த அடுத்த கணமே, வாகனத்தை சாலையின் நடுவிலேயே நிறுத்திய அப்பெண்கள், எதிரே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் இறங்கினர்.

அவர்களில் ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்க, மற்றொரு பெண் நடுரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாகச் சென்றவர்களை நோக்கி கைகளை வீசி, கூச்சலிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார். பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றபோதும், அவர் எதையும் பொருட்படுத்தாமல் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்குவாதத்தைத் தொடர்ந்தார்.
நடுரோட்டில் ரகளை - தள்ளுமுள்ளு:
வாக்குவாதம் முற்றிய நிலையில், சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த சிலர், சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஸ்கூட்டரை ஓரமாக நகர்த்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அப்பகுதியில் நின்றவர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் ஸ்கூட்டர் கீழே சாய, அந்த இடமே பெரும் போர்க்களமாக மாறியது.
அங்கிருந்த முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்தியும், அப்பெண்கள் ஆவேசமாகக் கத்தி சவால் விட்டனர். பின்னர் காலணி கூட இல்லாமல் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, அவ்வழியே வந்த லாரி, பள்ளிப் பேருந்துகள் மற்றும் கார்களை மறித்து தொடர்ந்து கூச்சலிட்டனர்.
காவலரையும் மதிக்காத ஆக்ரோஷம்
சம்பவ இடத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் உடனடியாக விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெண்களை சாலையிலிருந்து ஓரமாக வருமாறும், போக்குவரத்தைச் சரிசெய்ய ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், சீருடையில் இருந்த காவலரையும் மதிக்காத அப்பெண், அவரை மிக நெருங்கிச் சென்று ஒருமையில் பேசியதோடு, கைதட்டி ஏளனம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், மீண்டும் ஓடும் வாகனங்களுக்கு முன்பாகச் சென்று நின்று வாகனப் போக்குவரத்தை மறித்தார்.
வைரலாகும் காட்சிகள்
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர். காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
