தண்ணீர் கேன் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதி... 'அத்திப்பட்டி'யாக மாறுகிறது சென்னை!
சென்னை: சென்னை மக்கள் மீண்டும் ஒரு தண்ணீர்ப் பஞ்சத்தை சந்தித்துள்ளனர். தண்ணீர் கேன் நிறுவனங்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்துள்ளதால் தண்ணீர் கேன் கிடைப்பது பெரும் சிரமமாகியுள்ளது. இதனால் தண்ணீர் கேனை வாங்கி அதைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டு விட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் கேன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். வேறு வழியில்லாமல் அதையும் வாங்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு தண்ணீர் கேன் நிறுவனங்கள் மீ்து கடும் நடவடிக்கை எடுத்து குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெட்ரோ வாட்டர் இருந்தாலும்
சென்னை நகர மக்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் குடிநீரை விநியோகித்து வருகிறது. இதற்கு மெட்ரோ வாட்டர் என்று பெயர். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் குடிப்பதற்கு வாட்டர் கேனைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களைப் பகடைக் காயாக்கும் வாட்டர் கேன் நிறுவனங்கள்
மக்களின் இந்தப் போக்கைப் பயன்படுத்திக் கொண்டு செமத்தியாக காசு பார்த்து வருகின்றன வாட்டர் கேன் நிறுவனங்கள்.

அழுக்குக் கேன்களில் ஏதோ ஒரு தண்ணீர்
பிஸ்லெரி போன்றோர்கள் இருந்தவரை, ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தன இந்த வாட்டர் கேன் குடிநீர். ஆனால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஏகப்பட்ட நிறுவனங்கள் வாட்டர் கேன் பிசினஸில் சரமாரியாக புகுந்து விட்டன. அழுக்குக் கேன்களில் ஏதோ ஒரு தண்ணீரை அடைத்து மக்கள் தலையில் கட்டும் கொடுமை அரங்கேறியது.

இருந்தாலும் மக்கள் விடுவதாக இல்லை
ஆனாலும் தண்ணீர் கேன் வாங்கிப் பழக்கப்பட்டு விட்ட மக்கள் இதையும் வாங்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். பிறகென்ன,இஷ்டத்திற்கு ரேட் வைத்து இஷ்டத்திற்கு கேன்களில் அடைத்து தண்ணீர் வியாபாரம் களை கட்டியது. இப்போது இந்த தண்ணீர் கேன்களை நம்பியே பெரும்பாலான மக்களின் வாயும், வாழ்க்கையும் உள்ளது.

ஆப்பு வைத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
இந்த நிலையில்தான் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து வந்த, முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்த வாட்டர் கேன் நிறுவனங்களை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை பசுமைத் தீர்ப்பாயமும் உறுதி செய்ததது.

உடனே தண்ணீர் சப்ளை நிறுத்தம்
இதையடுத்து உடனடியாக ஸ்டிரைக்கை அறிவித்தன தண்ணீர் கேன் நிறுவனங்கள். கேன் சப்ளையை நிறுத்தி விட்டனர். இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் கேன்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

103 நிறுவனங்கள் மூடல்
சென்னையில் மட்டும் 103 தண்ணீர் கேன் நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். கடந்த 10 நாட்களாக இவை மூடப்பட்டு வருகின்றன.

20 லட்சம் பேர் தவிப்பு
சென்னையில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் தண்ணீர் கேன் வாங்கி குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது திணறிப் போயுள்ளனர்.

ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் குடிநீர்
தண்ணீர் கேன்கள் மூலம் சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை மதியம் முதல் நிறுத்தம்
புதன்கிழமை மதியம் முதல் அனைத்து தண்ணீர் கேன் நிறுவனங்களும் சப்ளையை நிறுத்தி விட்டன. நேற்று வரை மக்கள் எப்படியோ சமாளித்து விட்டனர். கடைக்காரர்களும் இருக்கிற கேன்களை கொடுத்து வாடிக்கையாளர்களை சமாளித்து விட்டனர்.

இன்று காலை முதல் பெரும் அவதி
ஆனால் இன்று காலை முதல் குடிநீர் கேன்கள் சப்ளை சுத்தமாக இல்லை. இதனால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். எந்தக் கடைக்குப் போனாலும் தண்ணீர் இல்லை என்ற பதிலே வருகிறது.

அக்வாகார்ட் வைத்திருப்போர்
அக்வாகார்ட் போன்ற ஆர்ஓ தண்ணீர் மெஷின் வைத்திருப்போர் சற்று தப்பியுள்ளனர். ஆனால் அதுபோன்ற மெஷின்கள் பழுதடைந்தோர் திடீரென கேன் வாங்க முடியாமல் பெரும் கடுப்படைந்துள்ளனர்.

விரைவில் சரியாகும் என்று நம்பிக்கை
இந்தப் பிரச்சினை விரைவில் சரியாகும் என்று கடைக்காரர்கள் நம்பிக்கையோடு உள்ளனர். தங்களிடம் தண்ணீர் கேட்டு வரும் கஸ்டமர்களைச் சமா்ளிக்க முடியாமல் அவர்களும் திணறுகிறார்கள்.

3 மாவட்டங்களில் மட்டும் 309 நிறுவனங்கள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 309 தண்ணீர் கேன் நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனையும் தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

மெட்ரோ வாட்டர் என்ன தருகிறது?
சென்னை நகரில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் ஒரு நாளைக்கு 819 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்கிறது. ஆனால் பெரும்பாலான குடும்பங்கள் வாட்டர் கேன்களையே நம்பியுள்ளன. மெட்ரோ வாட்டரை சமையலுக்கும், குளிக்கவும், பாத்திரம் கழுவவும் பலர் பயன்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications