தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்.. தவெக ஆட்சியிலும் அதே கொடுமையா?
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், தவெக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், முதலமைச்சர் விஜய் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் சிலர், அம்பேத்கர் சிலையை பிடித்து கண்ணீர் மல்கக் கோரிக்கையை முன்வைத்தனர். இதுதொடர்பாக, தூய்மை பணியாளர்களுக்கான சங்கம், உழைப்போர் உரிமை இயக்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்யும் விதமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். சிலர் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் 7 வது மண்டல மாநில செயலாளர் ஹரி பிரசாத், "கடந்த ஆண்டு முதல் போராடி வருகிறோம். 165 நாட்களுக்கு மேலாக போராடினோம். இப்போது முதலமைச்சராக உள்ள விஜய், அன்று எங்களை அழைத்துப் பேசி, ஆதரவு தந்தனர். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவிக்கு வந்தவுடன் எங்கள் போராட்டத்தையோ எங்கள் கோரிக்கையையோ கண்டு கொள்வதில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கித் தருவதாக முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க யாரும் முன்வரவில்லை. கேட்டால், நிதி நிலைமை சரியில்லை என்று சொல்கிறார்கள். யாருடைய அப்பா வீட்டு பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கி கொடுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "நாங்கள் யார் தூண்டுதலின் பேரிலும் செயல்படவில்லை. எங்களுக்கான முறையான சம்பளம் உயர்வு, பணி நிரந்தரம் இரண்டையும் தான் கேட்கிறோம். ஒவ்வொரு ஆட்சியிலும் கோரிக்கைக்காக போராடி வருகிறோம். நாங்கள் தவெக அரசை வரவேற்கிறோம். ஆனால், திமுக செய்ததை தான் அவர்களும் செய்கிறார்கள். புதிதாக எதையும் செய்யவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
