திருப்போரூர் மருத்துவக்கல்லூரி மாணவி.. அடுக்குமாடி வீட்டில் இருந்த கோலம்.. ஆடிப்போன போலீசார்
சென்னை: சென்னையில் சோழிங்கநல்லூர் தாண்டி, ஓஎம்ஆர் சாலை மற்றும் வண்டலூரை இணைக்கும் கேளம்பாக்கம் சாலை பகுதிகளில ஏராளமான புகழ் பெற்ற கல்லூரிகள் உள்ளன. குறிப்பாக திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை சுற்றுவட்டாரங்களில் தான் கல்லூரிகள் அதிகம். அந்த வகையில் நெல்லிக்குப்பத்தில் சத்யசாய் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த ரியாஸ் ராய் என்ற மாணவி, அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் தனது வீட்டில் எடுத்த தவறான முடிவு, ஆடிப்போக வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் சத்யசாய் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். அந்த வகையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வருண்குமார் ராய் என்பவரின் 24 வயது மகள் ரியாஸ் ராய் எம்.பி.பி.எஸ். 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவருடன் படிக்கும் 2 சக மாணவிகளுடன் தங்கியிருக்கிறார்கள். அடுக்குமாடி வீட்டில் இருந்து தான், தினமும் ரியாஸ் ராய் கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் காலை மாணவி ரியாஸ் ராய், தனக்கு மனநிலை சரியில்லை என சக மாணவிகளிடம் கூறி கல்லூரிக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். மற்ற 2 மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு சென்றனர். மாலை கல்லூரி முடிந்து அறைக்கு திரும்பிய மாணவிகள், அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை.. சந்தேகம் அடைந்த மாணவிகள் உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் மின் விசிறியில் ரியாஸ் ராய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பீகாரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து மாணவியின் தவறான முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2-ம் ஆண்டு படிப்பில் இரண்டு பாடங்களில் ரியாஸ் ராய் தோல்வி அடைந்ததால் வீட்டுக்கு வருவதாக பெற்றோரிடம் கூறியிருந்தாராம் தொடர்ந்து அங்கேயே தங்கி படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் மாணவி தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், தவறான முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய அறிவிப்பு (தற்கொலை தடுப்பு எண்கள் )
மன அழுத்தம், தற்கொலை எண்ணம் அல்லது ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தால், தனிமையில் வருந்தாமல் உடனடியாக உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன:
ஹெல்ப்லைன் (சினேகா): 044-24640050 (24 மணி நேரமும் செயல்படுகிறது)
தமிழக அரசின் மனநல உதவி எண்: 104
வழிகாட்டி (Vandrevala Foundation): 9999 666 555


Click it and Unblock the Notifications
