சாதாரண சத்தம்னு நினைச்சாங்க.. பைக் சீட்டை திறந்தால் நல்ல பாம்பு.. சென்னை கிட்ட மலைத்து நின்ற மக்கள்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடந்த வாரம் நடந்த சம்பவத்தை மறக்க முடியாது.. வீட்டில் தரையில் படுத்து உறங்கிய 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது மீண்டும் பாம்பு கடித்து ஒரு உயிர் போயுள்ளது.. மழைக்காலம் என்பதால், பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், தமிழகம் முழுவதும் பாம்புகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

பொதுவாக பாம்புகள் தங்கள் வாழ்விடமாக தரையில் உள்ள பொந்துகள், வளைகள், பாறைகளின் இடைவெளிகள், புதர்களின் அடிப்பகுதி போன்ற இடங்களை தேர்வு செய்து வாழ்ந்து வருகின்றன. காரணம் பாதுகாப்பு மட்டுமல்ல, மேற்கண்ட பகுதிகளில்தான் வெப்பம் குறைவாகவும், சிறிய உயிரினங்கள் நிறைய இரையாக கிடைக்கும்.. அதனால்தான் பொந்து உள்ளிட்ட இடங்களில் அதிகமாக தங்குகின்றன.
வெளிவரும் பாம்புகள்
ஆனால், இப்போது பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் இந்த பொந்துகள் மற்றும் வளைகளில் முழுவதும் தண்ணீர் நிரம்பி விடுவதால், மழைநீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவும், உயிர் பிழைப்பதற்காக உயரமான, உலர்ந்த, வெப்பமான பகுதிகளை நாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. சில இடங்களில் பாம்பு கடி சம்பவங்களும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை சரியாக அளிக்கப்படாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
புதுக்கோட்டை அஜித்
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 23 வயது இளைஞர் அஜித் என்பவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, பணியில் இருந்த டாக்டர் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் அஜித் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
மகளின் போட்டோ
இதன் தொடர்ச்சியாக, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஆலங்குளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமி என்பவரது மகள், +2 படிக்கும் கௌரி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளின் போட்டோவை வைத்து கொண்டு, மாற்றுத்திறனாளி தாய் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்க வைத்து வருகிறது.. இதையடுத்து, மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் வலுத்து வருகிறது.
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தன்னுடைய பைக்கில்
செங்கல்பட்டு பைக்கில் நல்ல பாம்பு
செங்கல்பட்டு மாவட்டம் ஓனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்..
பைக்கின் சீட்டுக்கு அடியில் அந்த நல்ல பாம்பு பதுங்கியிருந்துள்ளது.. உடனே அதை வெளியே விரட்ட முயற்சித்துள்ளார்.. ஆனால் பாம்பை விரட்டும் முயற்சி பலனளிக்காததால், இது குறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்... விரைந்து வந்த வீரர்கள், சுமார் 5 மணி நேரமாக போராடி அந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications