சென்னையில் மீண்டும் கனமழை.. சூறைக்காற்றுடன் நள்ளிரவில் வெளுத்து கட்டிய மழை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை: சென்னை சேப்பாக்கம், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்பட பல இடங்களில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. துவக்கத்தில் சென்னையை புரட்டிப்போட்ட கனமழை அதன்பிறகு கடந்த சில நாட்களாக ஓய்வு எடுத்தது.
அதன்பிறகு கடந்த 3 நாட்களாக மீண்டும் கனமழை அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மாலை வேளைகளில் துவங்கும் கனமழை காலை வரை பல இடங்களில் தொடர்ந்து பெய்து வந்தது.

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் மழை குறைந்துள்ளது.

இடி மின்னலுடன் மிதமான மழை
இதுதொடர்பாக நேற்று வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛‛காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபி கடல் பகுதிகளில் செல்லும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரகை்கால் பகுதியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்'' என கூறியுள்ளது.

சென்னையில் கனமழை
இந்நிலையில் தான் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் கனமழை பெய்தது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது பலத்த காற்று வீசியது. இதனால் குளிரும் அதிகரித்தது. இருப்பினும் பல இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. விரைவாக வடிந்து சென்றது.

இன்று மழை எங்கே?
மேலும் இன்றைய தினம் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடதமிழகம், டெல்டா மாவட்டம், கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்த நிலையில் இன்று தென்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications