"என்னை கொன்னுடுவாங்க..." இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறி பிரதீப்.. மறுநாளே கொல்லப்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதி எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் நிறைந்த பகுதி. நேற்று (செப்டம்பர் 9, 2026) புதன்கிழமை மாலை நேரத்தில், 30 வயதான பிரதீப் ராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென பிரதீப் ராஜின் வாகனம் மீது மோதினர். நிலைதடுமாறி பிரதீப் ராஜ் சாலையில் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்திகளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

crime Chennai

அலறித் துடித்த பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் நடந்த இந்தத் தாக்குதலைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். கொலையாளிகள் உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பினர்.

அக்கம் பக்கத்தினர் மற்றும் ரோந்துப் போலீஸார் அவரை மீட்டு உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொலைக்கு முந்தைய நாள் நடந்த பரபரப்பு பேட்டி

இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் பின்னணிதான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. உயிரிழந்த பிரதீப் ராஜ் கொல்லப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் (செப்டம்பர் 8) செய்தியாளர்களிடம் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதில் அவர் பேசியதாவது: "என் தாய், நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி, தனக்கு தெரிந்த நபர்களுக்கு கொடுத்தார். ஆனால் வாங்கிய சிலர் பணத்தை சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் என் தாயிடமும் என்னிடமும் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தனர். இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார்களும் வழக்குகளும் உள்ளன.

ஆனால் நியாயம் கேட்க வேண்டிய காவல் நிலைய ஆய்வாளர் என்னை அழைத்து கடுமையான மிரட்டல் விடுத்தார். 'உன் கை, காலை உடைத்து விடுவேன்.. உன்னை வெட்டி திருச்செந்தூர் கடலில் கரைத்து விடுவேன்' என்று அச்சுறுத்தினார். அதுமட்டுமில்லாமல், ரவுடி ராதாகிருஷ்ணனிடம் பேசச் சொன்னார். 'நீ எந்த வழக்கறிஞரை கூட்டி வந்தாலும் என்னிடம் எதுவும் செய்ய முடியாது' என்று எச்சரித்தார். என்னை மிரட்டும் ரவுடிகளுக்கு ஆதரவாக காவல்துறையே செயல்படுகிறது.. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கண்ணீருடன் ஊடகங்களிடம் முறையிட்டிருந்தார்.

இப்படி காவல் ஆய்வாளர் மீதும் உள்ளூர் ரவுடிகள் மீதும் பகிரங்கமாக புகார் தெரிவித்து, வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், அவர் சொன்னபடியே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

வட்டிப் பணத் தகராறும் கட்டப்பஞ்சாயத்தும்

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்த மோதலின் வேர் கந்துவட்டி மற்றும் பணப் பரிவர்த்தனைதான். பிரதீப் ராஜின் தாய் நவநீதம் என்பவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி கைமாற்றாகக் கொடுத்ததில் பெரிய அளவில் பாக்கி விழுந்திருக்கிறது.

பணத்தை இழந்த தரப்பு, உள்ளூர் ரவுடிகளை ஏவி பிரதீப் ராஜ் குடும்பத்தை மிரட்டத் தொடங்கியது. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு நீடித்து வந்ததால், இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் சமரசம் செய்வதற்குப் பதிலாக, ஒரு தரப்பிற்கு ஆதரவாக ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், பிரதீப் ராஜை மிரட்டி பொய் வழக்கில் சிறையில் அடைத்ததாகவும் பிரதீப் ராஜ் தனது கடைசிப் பேட்டியில் வேதனையுடன் விவரித்திருந்தார். அதிலும் அந்த அதிகாரியே உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டையதாக கூறப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை மற்றும் கைதுகள்

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து வடசென்னை முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்த தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட 4 பேரை இன்று காலை சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், பிரதீப் ராஜ் குற்றம்சாட்டிய காவல் ஆய்வாளர் மீதும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி கும்பல் மீதும் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் தொடரும் சட்டம்-ஒழுங்கு அச்சம்

சென்னையில் சமீப நாட்களாக பொது இடங்களில் நடக்கும் கொலைச் சம்பவங்கள் மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளன. சில தினங்களுக்கு முன்புதான் பெசன்ட் நகர் அருகே ஒரு முக்கியப் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், "என் உயிருக்கு ஆபத்து, போலீஸே மிரட்டுகிறது" என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஒரு இளைஞர் திருவொற்றியூர் மக்கள் நடமாடும் வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தலைநகரின் சட்டம் ஒழுங்கு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+