வழி தவறிய மாணவி..ரோந்து வாகனத்தில் நீட் தேர்வு மையத்தில் இறக்கி விட்ட சென்னை போலீஸ்! நெகிழ்ச்சி
சென்னை: நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், சென்னையில் வழி தவறி வேறு தேர்வு மையத்திற்கு சென்ற மாணவி ஆனந்தி என்பவரை சென்னை போக்குவரத்து போலீசார் பட்ரோல் வாகனத்தில் கொண்டு சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. மாணவர்கள் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டுதான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேர் நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை தவிர நாட்டின் ஏனைய அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது எனவும் தேசிய தேர்வு முகமை தனது விதிகளில் தெரிவித்து இருந்தது. அதுபோக நீட் தேர்வு எழுத மாணவ - மாணவிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் பொறுத்தவரையில் ஆபரணங்கள் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. வாட்ச் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் கருவிகளையும் கொண்டு செல்லக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. பெல்ட், ஷூ கயிறு கட்டியிருந்த மாணவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. சென்னையில் 38 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு எழுத பிற்பகல் 1.30 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனக்கூறப்பட்டு இருந்தது. இதனால், போக்குவத்து நெரிசல் போன்றவற்றால் தாமதம் ஆனவர்கள் சில மாணவ - மாணவிகளை பெற்றோர்கள் சரியான நேரத்திற்கு சென்று விட வேண்டும் என பதற்றத்துடன் அழைத்து வந்ததை காண முடிந்தது. சரியாக 1.30 மணிக்கு அனைத்து தேர்வு மையங்களின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன.
அதன்பிறகு வந்த தேர்வு எழுத வந்த யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. 2 மணிக்கு தொடங்கிய தேர்வு 5.20 மணி வரை நடைபெற்றது. இதனிடையே, சென்னையில் நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஆனந்தி என்பவர் , தேர்வு மையம் இருக்கும் இடம் சரியாக தெரியாததால் வழி தவறி சென்று இருக்கிறார்.
இதனால், நேரம் ஆனதால் பரிதவித்த மாணவியை சரியான நேரத்தில் போலீசார், போக்குவரத்து ரோந்து வாகனத்தில் அழைத்து வந்த தேர்வு மையத்தில் இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை ஆவடி போக்குவரத்து போலீசார், மாணவியை தேர்வு மையத்தில் சரியான நேரத்தில் இறக்கி விட்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications