தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துவது ஏன்.. பின்னணி
சென்னை: மத்திய அரசின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன், தமிழ்நாட்டிற்கென தனியாக "சமூக நீதி கணக்கெடுப்பு" நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பதை பாமக வரவேற்றுள்ளது. அதேநேரம் திமுகவோ, ஆட்சிப்பெறுப்பேற்ற பின், சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசின் பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்? இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா? என்று எழுப்பியது. இதில் பலருக்கும் புரியாதவிஷயம் என்றால், சாதி வாரி கணக்கெடுப்புக்கு பதில் தமிழக அரசு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துகிறது என்பது தான்.. அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் பற்றி பார்ப்போம்.
ஒரு மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய அடிப்படையான தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகளை தான் சமூக நீதி சர்வே என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே நடத்த வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன், தமிழ்நாட்டிற்கென தனியாக "சமூக நீதி கணக்கெடுப்பு" நடத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெற்ற பின்னர் பலரிடம் கேள்வி எழுந்து வருகிறது ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும்போது, மீண்டும் ஏன் சமூக நீதி கணக்கெடுப்பு? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்
உண்மையில், இந்த இரண்டு கணக்கெடுப்புகளின் நோக்கமும் வேறுபட்டவை என்கிறார்கள். ஏனெனில் மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரு சமூகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யும். எந்த சாதியில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் மக்கள் தொகை என்ன? என்பதற்கான புள்ளிவிவரங்களை அது வழங்கும்.
ஆனால், சமூக நீதி கணக்கெடுப்பு என்பது அதிலிருந்து முற்றிலும் மேம்பட்டது ஆகும். ஒரு சமூகத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை மட்டுமல்லாமல், அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதையும் கண்டறியவதற்காக நடத்தப்படது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் 50 லட்சம் பேர் இருக்கலாம். ஆனால் அந்த 50 லட்சம் பேரில் எத்தனை பேர் அரசு வேலையில் உள்ளார்கள். எத்தனை பட்டதாரிகள்? எத்தனை குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றன? அந்த சமூகத்தி அரசின் திட்டங்கள் எத்தனை பேரை சென்றடைந்துள்ளன? என்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு பதில் அளிக்காது. இந்த விவரங்களை அறிந்துகொள்வதற்காகவே தான் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த நடைமுறையை பாதுகாக்க வேண்டும் என்றால். அதற்கான தரவுகளை வலுப்படுத்தவும் துல்லியமான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. அந்த தேவையை சமூக நீதி கணக்கெடுப்பு பூர்த்தி செய்யும் என்று தமிழக அரசிடம் பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சமூக நீதி கணக்கெடுப்பின் மூலம் எந்த சமூகங்கள் கல்வியில் முன்னேறியுள்ளன? எந்த சமூகங்கள் இன்னும் பின்தங்கியுள்ளன? எந்த பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை? யாருக்கு கூடுதல் அரசு உதவி தேவைப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு அரசிடம் பதில் கிடைக்கும்.
சாதி விவரங்களுடன் குடும்ப வருமானம், கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு நிலை, நில உரிமை, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நிலை, அரசு நலத்திட்டங்களின் பயன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அரசு ஆய்வு செய்யும் என்கிறார்கள்.
அதே நேரத்தில், இந்த கணக்கெடுப்புக்கு எதிர்ப்புகளும் உள்ளன. இத்தகைய கணக்கெடுப்புகளால் சாதிய அமைப்புகள் மேலும் வலுப்படும், சாதிய எண்ணம் வலுவாகும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள். தங்களது தனிப்பட்ட அரசியலுக்காக சிலர் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக விமர்சனங்களும் உள்ளன. ஆனால் சிலர், தரவுகள் இல்லாமல் சமூக நீதி சாத்தியமில்லை, எந்த சமூகங்கள் இன்னும் பின்தங்கியுள்ளன என்பதை அறியாமல் அரசு திட்டங்களை உருவாக்க முடியாது என்றும் பதில் அளிக்கிறார்கள்.
தமிழக அரசை பொறுத்தவரை மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் "எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததும், சமூக நீதி கணக்கெடுப்பில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு பதிலை தேடுகிறது. இதுதான் தமிழக அரசு ஏன் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துகிறது என்பதற்கான விரிவான காரணம் ஆகும்.














Click it and Unblock the Notifications