தவறை சுட்டிக்காட்டினால், அரசு பள்ளிகள் மீது வெறுப்பை காட்டுவதா? கீர்த்தனாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருந்ததாக பள்ளி கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பி இருந்தார். கீர்த்தனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அன்பில் மகேஷ், தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது என்று காட்டமாக கூறியுள்ளார்.
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டார். அமைச்சரின் ஆங்கிலக் கேள்வி புரியாமல், அதற்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறினர். சில மாணவிகள் சரியாக பதில் அளித்தனர்.

விமர்சனத்திற்கு உள்ளான அமைச்சர் கீர்த்தனா செயல்
அப்போது அமைச்சர் கீர்த்தனா, 'இதையே லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்' என்றார். ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளிடம் கேட்ட கேள்விகள் சமூக ஊடகங்களில் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதில் தரும் வகையில் அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதள பக்கத்தில், பள்ளியில் அடிப்படை வசதி கூட இல்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக கீர்த்தனா வெளியிட்ட பதிவில், இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல. பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி.. கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன..
உங்க முன்னுரிமை எங்கே இருந்தது?
இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி. அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது.
பொய் கதைகளை கட்டி திசை திருப்பாதீங்க..
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது. மேலும் ஒரு விஷயம்.. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல. என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி.. அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை. முதல்வரின் வழிகாட்டுதலிலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல. நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்" என்று கூறியிருந்தார்.
சூட்டோடு சூடாக அன்பில் மகேஷ் பதிலடி
அமைச்சர் கீர்த்தனாவின் இந்த விமர்சனத்திற்கு சூட்டோடு சூடாக பதிலடி கொடுத்துள்ள அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:- தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
"அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்" எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.















Click it and Unblock the Notifications