எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகன் கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து விலகல்.. பரபர குற்றச்சாட்டு
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அதிமுக மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்கு தகுதி இருந்தும் இரு முறை எம்.எல்.ஏ. சீட் மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுக சிதறு தேங்காய் போல சிதறி வருகிறது. முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதுவரை அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். 47 தொகுதிகளில் அதிமுக ஜெயித்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு 41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பி.எஸ். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் இந்த கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கழக பணிக்காக உழைத்து வருகிறேன். ஜெயலலிதா எனக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர், ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் என பல கட்சிப் பொறுப்புகளை வழங்கினார். மேலும் அரசுப் பதவியிலான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் தலைவர், மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர், BSNL மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் என்னை அமர வைத்து மக்களுக்கு நற்பணிகளை செய்ய வாய்ப்பளித்தார். நானும் திறன்பட அதிமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தேன்.
மேலும் நடந்து முடிந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் கழகதிற்காக அயராது பாடுபட்டேன். மற்றும் அனைத்து போராட்டங்களிலும், மறியல்களிலும் கலந்து கொண்டு கழகத்திற்காக பாடுபட்டேன். பின்பு ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், எடப்பாடி K.பழனிச்சாமி கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 ஆண்டு காலம் எனக்கு மக்கள் பணி செய்ய தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவால் எனக்கு வழங்கப்பட்ட அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் பதவியை காரணமே இல்லாமல் நீக்கியது எனக்கு அளித்த மிகப்பெரிய துரோகம். பின்பு இரண்டு முறையும் தகுதி இருந்தும் மக்கள் பணி செய்ய எனக்கு எம்.எல்.ஏ சீட் உள்நோக்கத்துடன் தர மறுத்துவிட்டார். ஆகவே இவரை பொறுத்தவரை பணத்திற்குத்தான் மரியாதை, எங்களைப்போன்ற கழகத்திற்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்று உணர்ந்தோம். ஆகையால் கழகத்தில் எனது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நானும் எனது ஆதரவாளர்களும் கழகத்தை விட்டு விலகுவதாக இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications