உயிருடன் கடிக்க வரும் விஷப்பாம்பு.. பழங்குடியினரின் அலற வைக்கும் சத்தம்.. வியந்த அமெரிக்க ரூஸ்வெல்ட்
சென்னை: மழையை வேண்டி அமெரிக்காவின் ஹோபி பழங்குடியின மக்கள் உயிருள்ள விஷப்பாம்புகளை வாயில் கவ்விக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார்களாம்.. இப்படியொரு விசித்திரமான வழிபாட்டு முறைக்கு 'பாம்பு நடனம்' என்று பெயர்.. 1913-ல் அமெரிக்க முன்னாள் அதிபர் தியோடுர் ரூஸ்வெல்ட் இந்த நடனத்தை நேரில் கண்டு வியந்து பாராட்டியும் உள்ளார்.. இதை பற்றின செய்திதான் இணையத்தில் மீண்டும வைரலாகி கொண்டிருக்கிறது...!!
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் தான் ஹோபி (Hopi). பழங்குடி மக்கள் என்றாலே வித்தியாசமான சடங்குகளை செய்யக்கூடியவர்கள்.. அப்படித்தான் ஹோபி மக்களும்..

பாம்பு நடனம் ஆடுவது அவர்களின் புனித சடங்குகளில் ஒன்றாகும்.. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த சடங்கு நடத்தப்படும். இந்த சடங்கு எதற்காக தெரியுமா?
ஹோபி பழங்குடி மக்களின் சடங்கு
சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் வறண்டு போய், தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்போது, மழை வேண்டி இயற்கையிடம் தூது அனுப்பும் ஒரு ஆன்மீக வழியாகவே ஹோபி மக்கள் இந்த பாம்பு டான்ஸை நடத்துகிறார்கள். இவர்களின் நம்பிக்கையின்படி, பாம்புகள் என்பவை இவர்களின் மூதாதையர்கள் மற்றும் இயற்கையின் தூதுவர்கள்.. அதனால் தான், இந்த வழிபாட்டில் உயிருள்ள விஷப்பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சடங்கை எல்லாரும் பார்க்கும்படி பொதுவெளியில் நடத்துவதில்லை. இதற்காகவே பாம்புப் பிரிவு (Snake Clan), அண்டிலோப் பிரிவு (Antelope Clan) என்ற 2 பழங்குடி அமைப்பைச் சேர்ந்த ஆண்கள் ஒன்று கூடுகிறார்கள்... சடங்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே, கிவா (Kiva) எனப்படும் நிலத்தடி மண் அறைகளில் தங்களை தயார் படுத்தி கொள்கிறார்கள்.. இந்த அறைகள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
பாம்பு டான்ஸ் - பழங்குடி மக்களின் சடங்கு
இதற்காகவே, அந்த இளைஞர்கள் பாலைவனத்திற்குள் சென்று பல வகையான பாம்புகளைப் பிடித்து வந்து, மைதானத்தின் நடுவே உள்ள கிசி (Kisi) எனப்படும் பருத்தி மரக் கூடாரத்திற்குள் அடைத்து வைக்கிறார்கள்... இறுதியாக பொதுமக்கள் பார்க்கும்வகையில் சடங்குகள் நடக்கும்.
அப்போது இந்த நடனக் கலைஞர்களின் தோற்றமே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்குமாம்.. இடுப்புக்கு மேல் ஆடையின்றி, முகத்தின் நெற்றி பகுதியைத் தவிர மற்ற இடங்களில் கறுப்பு கலர் பூசி, கைகால்களில் வெள்ளை நிறக் கோடுகளுடன் காட்சியளிப்பார்கள். தலையில் பருந்து இறகுகள், கழுத்தில் வெள்ளி மாலைகள், கால்களில் ஆமை ஓட்டினால் செய்யப்பட்ட சலங்கைகள் கட்டியிருப்பார்கள்.. மைதானம் முழுக்க இந்த சலங்கை சத்தமும், பாரம்பரிய மந்திர சத்தமும் அதிருமாம்.
வாயில் பாம்பை கவ்வி
பிறகு கூடாரத்தில் இருக்கும் பாம்புகளை வெளியே எடுத்து, 3 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து இந்த நடனத்தை ஆடுகிறார்கள். முதல் நபர் ஒரு பாம்பை எடுத்து, தன் வாயில் கவ்விக்கொண்டு மைதானத்தைச் சுற்றி டான்ஸ் ஆடுவார். 2வது நபர் அவரது தோளில் கையைப்போட்டு, பாம்பின் கவனம் சிதறி கடிக்காமல் இருக்க அதன் அசைவுகளை கட்டுப்படுத்துவார். 3வது நபர் அவர்களுக்குப் பின்னால் பாதுகாப்புக்காக வருவார். இப்படி ஒவ்வொரு பாம்பாக வாயில் கவ்விக்கொண்டு இவர்கள் ஆடும் போது, சுற்றி நிற்கும் மக்கள் அவர்கள் மீது சோள மாவை தூவி வழிபடுகிறார்களாம்.
நடனத்தின் கடைசியில், இந்த பாம்புகள் அனைத்தும் திசைக்கு ஒன்றாக 4 திசைகளிலும் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த பாம்புகள் நேராகச் சென்று இயற்கையின் சக்திகளிடம் தங்களின் மழைக்கான கோரிக்கையை சேர்க்கும் என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
வியந்த அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்
கடந்த 1913ம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, அமெரிக்காவின் அப்போதைய முன்னாள் அதிபரான தியோடுர் ரூஸ்வெல்ட் தனது மகன்களுடன் இந்த கிராமத்திற்கு நேரில் வந்து இந்த பாம்பு டான்ஸை ரொம்பவே ரசித்து பார்த்தாராம்.. "இது வெறும் விபரீத விளையாட்டு அல்ல, இயற்கையோடு கலந்த ஒரு உன்னதமான ஆன்மீகக் குறியீடு" என்று பாராட்டியுள்ளார்.
அதேசமயம், அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பழங்குடியினரின் இந்த புனித சடங்கை ஒரு வேடிக்கை பொருள் போல அவமரியாதையாக பார்த்ததையும் தன்னுடைய பதிவுகளில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
காலங்கள் மாறினாலும், தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இயற்கையை அசைத்துப் பார்க்கும் தங்களின் இந்த மூதாதையர் வழிபாட்டை ஹோபி மக்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பை விளக்கும் ஒரு நேரடியான சாட்சி தான் இந்த பாம்பு டான்ஸ்...!!














Click it and Unblock the Notifications