மதுரவாயல் தவெக எம்எல்ஏ ஆபிஸ் திறப்பு விழா.. தூய்மை பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை
சென்னை: மதுரவாயல் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் சரண் அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி எச்சில் இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், எம்.எல்.ஏ அலுவலக நிகழ்ச்சிக்காக மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்களை எச்சில் இலை எடுக்க வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரண் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மதுரவாயலில் இன்று தனது அலுவலகத்தை ரேவந்த் சரண் திறந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

எச்சில் இலை எடுத்த தூய்மை பணியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ விஎஸ் பாபு உள்ளிட்ட சென்னையை சேர்ந்த தவெக எம்.எல்.ஏக்கள், தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர். திறப்பு விழா முடிந்ததும் தவெகவினருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ அலுவலகம் அருகே இருந்த சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திலேயே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது உணவு சாப்பிட்ட பின் எச்சில் இலை எடுப்பதற்கும் அங்கு குப்பைகளை அகற்றுவதற்கும் சென்னை மாநகராட்சி 11 மண்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.
எந்த வகையில் நியாயம்
தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் வார்டில் பணி இருந்தும் அதனை செய்ய விடாமல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் எச்சில் இலை எடுக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தவெக எம்.எல்.ஏ நடத்திய நிகழ்ச்சிக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே தவெகவினரின் செயல்கள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாகியுள்ளது.
தவறு செய்ய மாட்டோம்
முன்னதாக, ரேவந்த் சரண் புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. புதிய அலுவலகத்தை அமைச்சர் என். ஆனந்த் திறந்து வைத்து பேசினார். அவர் பேசும் போது, மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் எளிமையானவர். அவருக்கு சொந்தமாக தியேட்டர்கள் இருந்தாலும் எளிமையான முறையில் மக்களை அணுகி வருகிறார். பதவி ஏற்று 40 நாட்களில் தொகுதியில் உள்ள மக்கள் நல பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார்.
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எக்காரணத்தை கொண்டும் தவறு செய்ய மாட்டோம். அப்படித்தான் தமிழக முதல்வர் விஜய் எங்களை வழி நடத்தி வருகிறார். மக்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்ப்பதே எங்களது நோக்கம். சமூக வலைதளங்கள், இணையதளம், வாட்ஸ் அப், இ.மெயில் என எந்த வசதிகள் இருந்தாலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக வாரந்தோறும் தொகுதி மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். அவர்களது பிரச்சினைகளையும், குறைகளையும் உடனடியாக தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.














Click it and Unblock the Notifications