முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை! கவுதம் அதானி வழக்கில் அமெரிக்க நீதித்துறை விளக்கம்
வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி தொடர்பான பங்குச் சந்தை மோசடி வழக்கு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கு வாபஸ் பெற்றது ஏன் என்பதற்கான காரணங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது விளக்கியுள்ளது. இதன்படி, கவுதம் அதானி நிறுவனம் தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள புதிய நீதிமன்ற ஆவணங்களில் கூறியிருப்பதாவது:
கவுதம் அதானி நிறுவனத்தால் முதலீட்டாளர்களுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பதே வழக்கை கைவிட முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரி ஆர். டிரென்ட் மெக்காட்டர் உத்தரவில், "இந்த வழக்கில் தொடர்புடைய பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் சாதாரண முதலீட்டாளர்கள் அல்ல என்றும், உலகின் முன்னணி நிறுவன முதலீட்டாளர்களே அவற்றை வாங்கியிருந்தனர் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது. முதலீடு செய்வதற்கு முன்பு அனைத்து ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்யும் திறன் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் எளிதில் ஏமாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினம்.
இந்த வழக்கில் இடம்பெற்ற இரண்டு பத்திர வெளியீடுகளுக்கான தொகை முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பத்திரங்களுக்கும் திட்டமிட்டபடி பணம் செலுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் பணம் திருப்பிச் செலுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படாத காரணத்தால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனவே, குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய அடிப்படை பலவீனமடைந்துவிட்டது என்று நீதித்துறை கூறியுள்ளது.
இதனுடன், இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கும் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதித்துறை, சட்ட ரீதியான மற்றும் அதிகார வரம்பு தொடர்பான சவால்களையும் கருத்தில் கொண்டு, கவுதம் அதானி மீதான பங்குச் சந்தை மோசடி வழக்கை தொடர்வது நியாயமானதாக இருக்காது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தனது விளக்கத்தில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications