வெறும் 3 எழுத்துதான் மாறிருக்கும்.. தொட்டா மொத்தமும் போச்சு.. சென்னை டிராஃபிக் போலீசார் வார்னிங்!
சென்னை: போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது லிங்க்குகளை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் உண்மையான மெசேஜ் போலவே போலி மெசேஜ்களை அனுப்பி அதை கிளிக் செய்தால் வங்கி கணக்கு விவரங்களை ஹேக் செய்து பணம் திருடும் கும்பல் அட்டூழியம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கேமராக்கள் போக்குவரத்து போலீசாரின் "மூன்றாவது கண்" ஆகவே செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ, ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ, உங்களை கேமரா'கப்பென' படம் பிடித்துவிடும். அபராதம் கட்ட வேண்டிய சலான் லிங்க்கும் உங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தின் மூலமும் தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் பின்புற இருக்கையில் பயணம் செய்பவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை இயக்குபவர்கள் மீது உரிய புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம்.
தவறான வாகன எண் பலகை பொருத்துதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், சாலையில் போக்குவரத்து சிக்னல் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் ட்விட்டர் மூலமாக ஏராளமாக பெறப்படுகின்றன.
ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவு செய்யும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடவடிக்கையின் விவரங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 50 விதிமீறல்கள் பதிவாகி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது லிங்க்குகளை போலியாக அனுப்பி ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில், இ-சலான் ஸ்கேம் புதிய வகை சைபர் கிரைமாக உருவெடுத்துள்ளது. போலி இ-சலான்களை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசின் அபராதம் செலுத்தும் போர்ட்டலின் இணைய முகவரியைப் போலவே உள்ள அந்த லிங்க்கை க்ளிக் செய்தால் நமது வங்கிக் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படும்.
மோசடி கும்பல் அனுப்பும் மெசேஜில் உள்ள லிங்க்கும், உண்மையான லிங்கும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கும். ஆனால், எப்போதுமே போலீசார் அனுப்பும் உண்மையான அபராத ரசீது லிங்க்குகள் ".gov.in" என்றே முடிவடையும். வெறுமனே ".in" என மட்டும் முடிவடையும் லிங்க்குகள் போலியானவை. எனவே, சரியாக கவனித்து அபராதத்தை செலுத்துங்கள் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாராவது சந்தேகத்திற்கிடமான இ-சலான் அபராத மெசேஜை பெற்றால், அவர்கள் அதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்க வேண்டும் அல்லது https://cybercrime.gov.in இல் புகாரளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடி செய்பவர்கள் பொதுமக்களை போலி தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் பயன்படுத்தி தொடர்பு கொண்டு, நீங்கள் உடனடியாக அபராதம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மிரட்டுவார்கள் என்றும், அவ்வாறு அழைப்பு வந்தால் புகார் அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த மோசடியில் சிக்காமல் இருக்க, வாகன உரிமையாளர்கள் எப்பொழுதும் இ-சலான் மெசேஜின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சலான் விவரங்களை சரிபார்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications