இனி சென்னை தத்தளிக்காது.. நினைத்தால் மழை பெய்யும்.. நினைத்தால் மழை நிற்கும்.. புதிய கண்டுபிடிப்பு
சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் மழையை அதிகரிப்பது மட்டுமின்றி, எந்த இடத்தில் மழை பெய்ய வேண்டும்.. எவ்வளவு மழை பெய்ய வேண்டும்.. எப்போது மழை நிற்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்யும் நிபுணத்துவம் பெற்றுவிடுவோம் என்று இந்திய வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான ஆய்வுகள் சத்தமின்றி தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்போதெல்லாம் பருவநிலை மாற்றம் காரணமாகத் தீவிரமான வானிலை பாதிப்புகள் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக மழை சீசனில் சில மணி நேரங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

சென்னை தப்பும்: இதனால் நம்ம சென்னையின் பல முக்கிய பகுதிகள் மூழ்குவது வாடிக்கையாகவே இருக்கிறது. இதற்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் இப்போது ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மழையை நம்மால் முழுமையாக கண்ட்ரோல் செய்ய முடியுமாம். இது மனிதக் குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும்.
உதாரணமாக நம்ம சென்னையில் ஒரே நாளில் அதிக மழை பெய்கிறது.. அதை இப்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், சில ஆண்டுகளில் விரும்பினால் நாம் அந்த மழையை நிறுத்திவிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதேபோல மழை சற்று குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க வைக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

ஆய்வாளர்கள் கருத்து: இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "இது குறித்த ஆரம்ப பரிசோதனைகள் நடந்து வருகிறது. செயற்கை மழை குறித்து இப்போது ஆய்வகங்களில் சோதனை செய்து வருகிறோம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கிளவுட் சேம்பர்ஸில் தேவையான சோதனைகள் அடுத்த 18 மாதங்களில் தொடங்கும். எதிர்பார்த்தபடி ஆய்வு முடிவுகள் அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நம்மால் வானிலையைக் கட்டுப்படுத்த முடியும்.
தேவையான நாளில் மழையின் அளவை அமெரிக்க அல்லது குறைக்க இதன் மூலம் முடியும் . மேலும், வானிலை முன்னறிவிப்புகளைத் துல்லியமானதாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
இப்போது மேக வெடிப்பு உட்பட சில வானிலை நிகழ்வுகளை நம்மால் முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை. இதனால் அதீத மழை பெய்யும் போது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் வானிலை மையம் இறங்கியுள்ளது.
உலக நாடுகள்: அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே கிளவுட் சீடிங் முறை இருக்கிறது. இதன் மூலம் மழை பெய்யும் சூழல் இருந்தால் மழையை உடனடியாக பெய்ய வைக்க முடியும். மேலும், அறுபடை காலத்தில் மழையின் அளவை குறைக்கவும் முடியும். இது தொடர்பாகவே இப்போது இந்திய வானிலை ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர்.

விரிவான திட்டம்: மேலும், தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னறிவிப்புகளைத் தர விரிவான ஒரு திட்டத்தையும் உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தேவைப்படும் போது கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேம்பட்ட சென்சார்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்கள், அடுத்த தலைமுறை ரேடார்கள் மற்றும் சாட்டிலைட் அமைப்புகள் மூலம் வானிலை அறிவிப்புகள் மேலும் மேலும் துல்லியமானதாக இருக்கும்.
வானிலை அறிவிப்புகள் ஒரு பக்கம் இருக்கும் அதேநேரம் அடுத்த 5 ஆண்டுகளில் வானிலையைக் கட்டுப்படுத்த கிளவுட் சீடிங் முறைகளிலும் தீவிர ஆய்வு நடந்து வருகிறது. இது திட்டமிட்டபடி நடந்தால் 5 ஆண்டுகளில் வெள்ளம் என்பதே இல்லாமல் போய்விடும்.












Click it and Unblock the Notifications