சென்னை மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்! அறுசுவை அசைவ விருந்துடன் நவம்பர் 5ஆம் தேதி!
சென்னை: டெல்டா, தெற்கு, மேற்கு, வடக்கு என 4 மண்டலங்களைத் தொடர்ந்து நிறைவாக சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது குறித்து துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ''

''மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.''
''கழகத் தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்" நடத்திட முடிவெடுக்கப்பட்டு, டெல்டாட மண்டல கூட்டம் ஜூலை 26 அன்று திருச்சியிலும் - தென்மண்டலக் கூட்டம் ஆகஸ்ட் 17 அன்று ராமநாதபுரத்திலும் - மேற்கு மண்டலக் கூட்டம் செப்டம்பர் 24 அன்று காங்கேயத்திலும் - வடக்கு மண்டலக் கூட்டம் அக்டோபர் 22 அன்று திருவண்ணாமலையிலும் என இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 20 -க்கும் மேற்பட்ட கழகத்தின் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு கொள்கை வழிகாட்டுதலும் - தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டு, 4 மண்டலங்களிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.''
''அதைத் தொடர்ந்து. நிறைவாக, சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற நவம்பர் 5 அன்று திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் கழகத் தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.''
''சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பின்வரும் 11 கழக மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.''
1.திருவள்ளூர் கிழக்கு
2.திருவள்ளூர் மத்திய
3. திருவள்ளூர் மேற்கு
4.சென்னை கிழக்கு
5.சென்னை வடகிழக்கு
6.சென்னை வடக்கு
7.சென்னை மேற்கு
8.சென்னை தெற்கு
9.சென்னை தென்மேற்கு
10.காஞ்சிபுரம் வடக்கு
11.காஞ்சிபுரம் தெற்கு












Click it and Unblock the Notifications