சென்னையின் புதிய ஹாட் ஸ்பாட்.. யோசித்து பார்க்க நிலைக்கு உயரும் கேஎன்கே சாலை.. இந்த போட்டோவை பாருங்க
சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான காதர் நவாஸ் கான் சாலை (கேஎன்கே சாலை), தற்போது அதிநவீன சீரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இந்த சாலை திறக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி முன்னெடுக்கும் இரவு நேர வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்தச் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இது நகரத்தின் இரவுப் பொழுதிற்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதர் நவாஸ் கான் சாலை (கேஎன்கே சாலை) மாற்றம்
சென்னை ஏற்கெனவே 24 மணி நேர நகரமாகச் செயல்படுகிறது. இங்கு பல கடைகளும், உணவகங்களும் பகல்-இரவு பாராமல் இயங்குகின்றன. இந்தச் சூழலில், இரவு நேர அனுபவங்களை மேலும் மெருகூட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி வகுத்துள்ளது.
இந்த மேம்பாட்டுத் திட்டங்களின் மையமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ் கான் சாலை ஒரு புதிய அடையாளத்தைப் பெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சாலை அகலப்படுத்தப்பட்டு, அழகிய நடைபாதைகளுடன் புதுப்பிக்கப்படும்.
24 மணி நேரமும் இயங்கும் கடைகள், பப்கள், பார்கள் மற்றும் புதிய வகையிலான சாலையோர வணிக வளாகங்கள் இங்கே அமைக்கப்படவுள்ளன. பெங்களூரின் எம்.ஜி. சாலை, சர்ச் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் போன்ற பகுதிகளுக்கு இணையாக, கேஎன்கே சாலை ஒரு சர்வதேச தரத்திலான வணிக மையமாக மாறும்.
இரவு முழுவதும் செயல்படும் பப்கள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டவும், புதிய கலாச்சார அனுபவத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நவீன, நீளமான பிளாசா அமைக்கப்படும். இந்தப் பிளாசாவின் நுழைவு வாயில் வரை இருசக்கர வாகனங்கள் செல்ல வசதி செய்யப்படவுள்ளது.

சென்னை சாலைகள்
ரட்லேண்ட் கேட் 4வது தெரு, வாலஸ் கார்டன் 2வது தெரு, வாலஸ் கார்டன் 3வது தெரு போன்ற அருகிலுள்ள சாலைகளும் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலாப் பகுதிகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள இடங்களை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, சென்னைக் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணிகள், புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்கும் பணிகள், சாலைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
📍KNK Road, Chennai is getting an upgrade — and it’s coming out really well.
— Streets Of TamilNadu (@TN_Streets) November 22, 2025
Expected to be ready in the next 2–3 months, this stretch is set to become one of the most happening shopping and recreational hubs in the city.#GoodStreets #Chennai@Super_Chennai_ pic.twitter.com/wKjuxux8ah
'சிங்கார சென்னை 2.0'
'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்காக ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த கீ கார்ட்னர்ஸ் அமைப்புடன் இணைந்து, சென்னை அருகே ₹300 கோடி செலவில் ஒரு தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மேலும், துறைமுக நகரங்கள் திட்டத்திற்கு ₹1,825 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் வரையிலான 20 கி.மீ. தொலைவுள்ள ஈரடுக்கு உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கி.மீ. தூரத்திற்கு இருபுறங்களிலும் 'பெருவழி மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications