சிதம்பரம் நடராஜர் கோவிலில் யார் பெரியவர் என்ற பிரச்சினையில்லை.. சொல்கிறார் சேகர்பாபு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையத்துறை இடையே யார் பெரியவர்கள் என்ற பிரச்சினை இல்லை என்று கூறினார். பக்தர்கள் வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத திருமஞ்சன தரிசனத்தையொட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 4 நாட்கள் கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து, அதுதொடர்பான அறிவிப்பு பலகையை வைத்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 24ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறையினர் காவல்துறையினர் உதவியோடு அறிவிப்பு பலகையை அகற்ற சென்றபோது, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கடந்த 26ஆம் தேதி மாலை போலீஸ் பாதுகாப்புடன் அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. அதன் பின்னரும் கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தீட்சிதர்கள் சட்டத்தை மீறி செயல்படுவதாக கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பக்தர்களிடம் இருந்து அதிக கோரிக்கை வருவதால் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசம் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக கூறினார்.
பிரச்சினை ஓய்ந்த நிலையில் நேற்றைய தினம் கனகசபை மீதேறி பக்தர்கள் நடராஜரை வழிபட்டனர்.இதனையடுத்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபுவிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழிபாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழக அரசும் செய்யும் என்று கூறினார். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினையே இல்லை. இறையன்பர்கள் தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications