கோர்ட்டுக்கு எந்த போலீசாரை அனுப்ப வேண்டும்? டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பரபர கடிதம்
சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் அரசு தலைமை குற்றவியில் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அந்த குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் வழக்கு விபரங்களுடன் செல்வார்கள்.

போலீஸ் தரப்பில் அவர்கள் வழங்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை பெற்று கொடுப்பார்கள். இது வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பரபரப்பான கடிதம் ஒன்றை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எழுதியுள்ளார். அதில் வழக்குகள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த காவல்துறையினரை மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்காக, ஆஜராகியிருந்த காவலர், முறையான தகவல்களை வழங்க முடியாமல் தடுமாறியதை சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஏற்கனவே இதுகுறித்து பிறப்பித்த உத்தரவுகளுக்கு செவி சாய்க்கவில்லை என அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கு பற்றிய தகவல்கள் தெரிந்த காவலர்களை மட்டுமே அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபியை அறிவுறுத்தும்படி, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, வழக்கு தொடர்பான முழு விவரங்கள் தெரிந்த அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கூறி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications