எம்ஜிஆர் வலது கரம்.. மறைந்த ஆர்எம் வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை: எம்ஜிஆரின் வலது கரமும், முதுபெரும் அரசியல் தலைவருமான ஆர் எம் வீரப்பன் இன்று காலமானார். அப்பல்லோ மருத்துவமனையில், அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர். எம். வீரப்பன் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர். எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஆர்.எம் வீரப்பன் உயிர் இன்று பிற்பகலில் பிரிந்தது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ஆர் எம் வீரப்பன் தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கினார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஆர் எம் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆர்எம் வீரப்பனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆர் எம் வீரப்பன் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமின்றி திரை, இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பு என்று கூறியிருந்தார்.
இதேபோல், எடப்பாடி பழனிசாமியும் ஆர்எம் வீரப்பனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், மாண்புமிகு அம்மா அவர்கள் காலத்தில் கழக இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் ஆர் எம் வீரப்பனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications