கலைஞர் நாணயத்தில் இந்தி..எகிறி அடித்த எடப்பாடி! நாட்டு நடப்பு தெரியுமா? பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை : நேற்று வெளியிடப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தி இடம்பெற்றிருப்பதாகவும், பாஜக - திமுக இடையே ரகசிய உறவு இருப்பதாக விமர்சித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசு எனவும், அதனால் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார் என பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஆன கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த 2023 ஜூன் மூன்றாம் தேதி முதல் ஓராண்டாக தமிழக அரசு மற்றும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல நிகழ்வுகளும் நடந்தன.

அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. தொடர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் நாணய வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட அதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதேநேரத்தில் அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தியை அழைத்து ஏன் வெளியிடவில்லை. இதிலிருந்து தி.மு.க, பா.ஜ.க ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என விமர்சித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் திமுக நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்? கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது" எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை திருவொற்றியூரில் எம்.எல்.ஏ. கேபி சங்கரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய அவர்," தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்,
அந்த விழா மிகச் சிறப்பாக அரங்கேறியது. அந்த மகிழ்ச்சியில் எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை. கலைஞரின் புகழ் குறித்து அமைச்சர் ராஜநாத் சிங் புகழ்ந்து பேசினார். திமுகவினர் கூட அப்படி பேசி இருக்க முடியாது. அந்த அளவுக்கு கலைஞரின் புகழ் ஓங்கி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர் நாளைய வெளியிட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என கேட்டிருக்கிறார்.
அந்த விழாவை நடத்தியது மத்திய அரசு. அதனால் தான் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மேலும் இந்திய அரசு வெளியிடும் அனைத்து நாணயங்களிலும் இந்தி இடம் பெற்றிருக்கும். இதற்கு முன்னர் அண்ணா, எம்ஜிஆர் வெளியிடப்பட்ட நினைவு நாணயங்களிலும் இந்தி தான் இருந்தது. அந்த நாணயங்களை எடப்பாடி பழனிச்சாமி பார்த்திருக்க மாட்டார் போல.. பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது.
அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன் தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுகவினருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவர்களை உருவாக்கிய ஜெயலலிதாவுக்கு ஒரு நினைவு அஞ்சலி கூட்டம் கூட அவர்களால் நடத்த முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி போல ஊர்ந்து சென்று பதவி வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாணயம் குறித்த அறிவு கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை.. நாட்டு நடப்பை தெரிந்திருக்க வேண்டும் அல்லது மண்டையில் மூளையாவது வேண்டும்" என பேசினர்.












Click it and Unblock the Notifications