தொடரும் இஸ்லாமிய வெறுப்பு.. மனிதகுலத்திற்கே கறை..இஸ்லாமாஃபோபியாவுக்கு எதிரான நாளில் ஸ்டாலின் ஆதங்கம்
ஐநாவின் இஸ்லாமாஃபோபியாவுக்கு எதிரான சர்வதேச நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை ஆகிய வெறுக்கத்தக்க செயல்களால் வரலாறு நிரம்பி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மனிதகுலத்தின் மீது ஒரு கறையாகவே இருப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட தீர்மானம் எடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 15-ஐ இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாக அறிவித்தது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், இது தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அது உலக அளவில் வாழும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டது. ஓஐசி அமைப்பில் உள்ள 57 நாடுகளுடன் சேர்த்து, சீனா, ரஷ்யா உட்பட எட்டு நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன.

ஐநா அறிவிப்பு
இதன் பின்னர் மார்ச் 15ம் தேதியை இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாக ஐநா அறிவித்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதம் உலகில் அதிகரித்து வருகிறது. இன்று உலக அளவில் பேசப்படும் அரசியல் பிரச்சினையாகவும் இஸ்லாமோஃபோபியா மாறியுள்ளது. இஸ்லாமியர் சமூக மக்களின் தனித்துவமான உடை, உணவுப் பழக்கவழக்கங்கள், அரசியல் நடவடிக்கைகள், கல்வி வரை அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளன.

இஸ்லாமோஃபோபியா
கர்நாடகாவில் ஹிஜாப் உடை விவகாரம், வட மாநிலங்களில் மாட்டுக் கறி வைத்திருந்த இஸ்லாமியர் கொல்லப்பட்ட விவகாரம், இஸ்லாமியர்கள் கொரோனாவை பரப்புகிறார்கள், சினிமாக்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்சிப்படுத்துவதல், இஸ்லாமியர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் என அண்மை காலமாக இஸ்லாமோஃபோபியா அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மனிதகுலத்தின் மீது கறை
இந்த நிலையில் ஐநாவின் இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான சர்வதேச நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை ஆகிய வெறுக்கத்தக்க செயல்களால் வரலாறு நிரம்பி இருக்கிறது. அவை மனிதகுலத்தின் மீது ஒரு கறையாகவே இருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.

தீர்மானம் எடுப்போம்
அதேபோல், இஸ்லாமியர் வெறுப்பு மனநிலையை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச தினத்தில், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையையும் எதிர்த்து போராடவும், அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஏற்ப அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தீர்மானம் எடுப்போம் என்றும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications