மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்! காவிரியின் உரிமை காக்க தொடர்ந்து போராடுவோம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை : காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம், காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்ற முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்த மாதம் 22ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாது அணை விவகாரம்
இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும்; தனது உரிமையை நிலைநாட்டும் என்பதை முதலில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக மாநில அரசு
இத்தகைய சூழலில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கவும். நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. அதில் மிகமுக்கியமானது, மேகதாது அணை கட்டும் திட்டம்! மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத் தமிழக உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும்.
மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழக அரசின் உறுதியான இறுதியான நிலைப்பாடு! மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு தனது பிடிவாதமான செயல்களிலிருந்து பின்வாங்காமல் நடந்து வருகிறது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற செய்தி வெளியானதும், கடந்த 13 ஆம் நாளன்று பிரதமருக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

அமைச்சர் துரைமுருகன்
மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தார். "உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினைக் குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும்வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என மாண்புமிகு கர்நாடக முதலமைச்சருக்கு அறிவுறுத்தி இருந்தார் அமைச்சர் துரைமுருகன்.

தலைவர் எஸ்.கே.ஹல்தர்
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.

மக்கள் கொந்தளிப்பு
இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள். ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன். காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத்தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழக அரசு தொடர்ந்து போராடும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications