விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள்.. 59 ஆண்டு திராவிட ஆதிக்கத்தை உடைத்த தவெக! தமிழக அரசியலில் மெகா அதிரடி
சென்னை: தவெக அமைச்சரவையில் நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் 74 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.. பெண் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம், மாநில அரசியலின் போக்கையே மாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.. இந்த துணிச்சலான முடிவு, பெண் அரசியல் தலைவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதாக திகழ்கிறது-
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத புதிய மாற்றமாக, 74 ஆண்டு கால அரசியல் பயணத்தில் முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது, மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவையின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 1967-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான் முதன்முதலாக சத்தியவாணி முத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு ஆட்சிகள் மாறி வந்தாலும், பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டாமல் இருந்தது.
அமைச்சரவையில் 4 பெண்கள்
உதாரணமாக, 2011-2016 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் அமைச்சர்களாக பணியாற்றியது அந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த எல்லையைத் தாண்டி இப்போது நான்கு பெண்களை அமைச்சரவையில் அமர வைத்து, புதிய சாதனையைத் தவெக அரசு நிகழ்த்தியுள்ளது.
இப்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக ஏற்கனவே கீர்த்தனா பதவி வகித்து வருகிறார். அவருடன் கூடுதலாக மூன்று புதிய பெண் அமைச்சர்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். அவினாசி தொகுதியிலிருந்து எஸ்.கமலி, குமாரப்பாளையத்திலிருந்து சி.விஜயலட்சுமி மற்றும் ராஜபாளையத்திலிருந்து கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.
நான்கு பெண் அமைச்சர்கள்
இந்த 23 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புகள், தமிழக அரசியலில் பெண்களின் பங்களிப்பு மேலும் வலுவடைவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த அமைச்சரவை விரிவாக்கமானது தவெக கட்சியின் அரசியல் வியூகத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையில், அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எண்ணிக்கை சார்ந்த மாற்றம் மட்டுமே கிடையாது, நிர்வாக இயந்திரத்தில் பெண்களின் பங்கேற்பு மற்றும் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.
தவெக அரசு - வரலாற்று சாதனை
குறிப்பாக, தவெக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, வருங்காலத் தலைமுறையினருக்குப் பெண் அரசியல் தலைவர்களுக்கான புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
இந்த வரலாற்று சாதனை, தமிழக அரசியலில் பெண்களின் குரல் இனி இன்னும் வலுவாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
எனினும், 74 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதியுள்ள இந்தத் தருணம், தமிழக நிர்வாகத்தில் பெண் ஆட்சியாளர்களின் பங்களிப்பை எந்த அளவுக்கு உயர்த்தப்போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரங்களின் முக்கிய விவாதமாக உள்ளது.
முக்கிய சவால்கள் என்னென்ன
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்த 4 பெண் அமைச்சர்களும், பல வருடங்களாகவே தொடரும் அரசியல் ஆதிக்கங்களுக்கு மத்தியில், புதிய கோணத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளனர்.. இவர்களுக்கு முன்னால் நிறைய முக்கிய சவால்களும் உள்ளன.
குறிப்பாக நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது இவர்களுக்கு முதல் சவாலாக இருக்கும்.. நீண்ட காலமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த பல துறைகளில், இவர்கள் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும்போது, மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும், கொள்கைகளைச் செயல்படுத்தும்போது ஏற்படும் நிர்வாகத் தடைகளைத் தகர்ப்பதும் கடினமான காரியமாக இருக்கும்..
அதிலும் தொழில்துறை போன்ற முக்கியத் துறைகளைக் கையாளும் அமைச்சர்கள், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில்துறை வளர்ச்சியைத் தக்கவைப்பது போன்ற பணிகளில் கடுமையான அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்.. எனவே, இந்த புதிய அமைச்சர்களின் வருகையானது, தமிழக வளர்ச்சிப் பாதையில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!












Click it and Unblock the Notifications