திருச்சி கிழக்கு உங்களுக்கு! சிதம்பரம் எங்களுக்கு! மெகா டீலில் விசிக, தவெக? திருமாவளவன் ஓகே சொல்வாரா
சென்னை: திருமாவளவன் மாநில அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என சிறுத்தைகள் விரும்புவதால் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதக சொல்லப்படுகிறது. அதே போல் சிதம்பரம் மக்களவை தொகுதியில் தவெக சார்பில் ஒருவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு திருமாவளவன் ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் அதிரடியாக, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ஒரு மெகா 'அரசியல் பரிமாற்ற' (Barter Deal) வியூகத்தை தமிழக வெற்றி கழகமும், விசிகவும் வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1. பின்னணி: திருச்சி கிழக்கு டூ சிதம்பரம் எம்பி சீட்!
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தற்போது த.வெ.க அரசுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், விசிகவை தங்களது அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் திமுக கூட்டணியை முற்றிலுமாகப் பலவீனப்படுத்த த.வெ.க திட்டமிட்டுள்ளது.
2. விசிக நிர்வாகிகளின் பிடிவாதம்: "திருமா மட்டுமே அமைச்சர்!"
விசிகவை அமைச்சரவைக்குள் கொண்டு வர த.வெ.க முயன்றாலும், அதற்குள் ஒரு உட்கட்சிச் சிக்கல் நீடித்து வந்தது. இதுகுறித்து விசிக மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
விசிக சார்பில் தலைவர் திருமாவளவனைத் தவிர வேறு யாரையும் அமைச்சராக்கக் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை.
வேறு ஒருவரை அமைச்சராக்கினால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குத் தாவக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே, நீண்ட நாட்களாக விசிக முன்வைத்து வரும் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை நனவாக்க திருமாவளவனே நேரடியாக அமைச்சராக வேண்டும் என்று தலைவருக்கு நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
3. அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுகிறாரா திருமாவளவன்?
திருமாவளவன் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நின்றால், அவருக்குத் த.வெ.க முழு ஆதரவு அளிப்பதுடன் அமைச்சரவையில் மிக முக்கியத் துறையையும் ஒதுக்க முன்வந்துள்ளது. மேலும், திருமாவளவன் போட்டியிட்டால் அவருக்குப் பின்வரும் சாதகமான சூழல் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக: கூட்டணியில் விரிசல் விழாமல் இருக்க திருமாவளவனுக்கு ஆதரவு அளிக்கலாம்.
நாம் தமிழர் கட்சி: சீமானுக்குத் திருமாவளவன் மீது தனிப்பட்ட நன்மதிப்பு இருப்பதால், அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல் இருக்க வாய்ப்புள்ளது.
அதிமுக: விசிக தரப்பில் அதிமுகவிடமும் ஆதரவு கோரப்படலாம் எனத் தெரிகிறது.
இப்படி அனைத்து முனைகளிலும் ஆதரவு கிடைத்தால், திருமாவளவன் மிக எளிதாக வென்று தமிழகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்பார்.
4. த.வெ.க-வின் முதல் நாடாளுமன்ற எம்பி!
இந்த வியூகத்தின் இறுதிப் பகுதியாக, திருமாவளவன் எம்.எல்.ஏ-வாகத் தேர்வாகி அமைச்சரானதும், அவர் தற்போது வகித்து வரும் சிதம்பரம் மக்களவை (எம்பி) பதவியை ராஜினாமா செய்வார்.
அதன்பின் நடைபெறும் சிதம்பரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், விசிகவின் முழு ஆதரவோடு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும். இதன் மூலம் டெல்லி நாடாளுமன்றத்திற்குள் தங்களது கட்சியின் முதல் எம்பியை அனுப்பும் அரிய வாய்ப்பு த.வெ.க-வுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் உத்வேகத்துடன் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் பெற்ற நாடாளுமன்றத் தொகுதியை தவெகவுக்கு திருமாவளவன் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விட்டு கொடுப்பாரா என்றால், ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஆனால் திமுக வேட்பாளரை நிறுத்தும் போது திருமாவளவன் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதோ ஆதரவு கேட்பதோ செய்வாரா என்பது சந்தேகமே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications