"பாரதிராஜாவை புதைத்த மண்ணின் ஈரம் கூட காயவில்லை... அதற்குள் பாக்யராஜுக்கு தீ மூட்டுவதா?" - வைரமுத்து உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா அடுத்தடுத்து சந்தித்து வரும் இழப்புகள் திரையுலகையே உலுக்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்புதான் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ரசிகர்களையும் திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து யாரும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் (K. Bhagyaraj ) திடீர் மறைவு இன்னொரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல் காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாக்யராஜ், திடீரென நெஞ்சுவலி இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பாக்யராஜின் கடைசி நிமிடம்

இந்த செய்தி வெளியானதும், நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

K Bhagyaraj Vairamuthu Bhagyaraj

வைரமுத்து உருக்கமான பதிவு

அந்த வரிசையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அவர் தனது பதிவில், "பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா? என்ன கொடுமை இது!" என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் பாக்யராஜின் கலைப் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், "பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு, அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர். அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார்." என்று அவரது தனித்துவமான திறமையை பாராட்டியுள்ளார்.

மேலும், "நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்து விடுவார். 80களில் தமிழ் சினிமாவை நோக்கி வந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை கொடுத்தவர் பாக்யராஜ்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாக்யராஜின் சாதனைகளை நினைவுகூர்ந்த வைரமுத்து, "எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார். பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிரவைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ! பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும்." என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

வருத்தத்தில் ரசிகர்கள்

வைரமுத்துவின் இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக "பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை" என்ற ஒரு வரியே ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கதையை ஒரு புதிய கோணத்தில் சொல்லக் கற்றுக் கொடுத்த திரைக்கதை மன்னனாக பாக்யராஜ் என்றும் நினைவுகூரப்படுவார் என்று ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

பாரதிராஜா மறைவின் சோகம் இன்னும் குறையாத நிலையில், அவரின் சீடராக தொடங்கி தனக்கென ஒரு பேரரசை உருவாக்கிய பாக்யராஜும் இன்று இல்லாதது, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+